அரசு நிறுவனங்களில் பணி நேரத்தை 12 மணி ஆக உயர்த்த திட்டமா..? மத்திய மந்திரி விளக்கம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 Feb 2022 5:24 AM IST (Updated: 11 Feb 2022 5:24 AM IST)
t-max-icont-min-icon

அரசு நிறுவனங்களில் பணி நேரத்தை 12 மணி ஆக உயர்த்தும் திட்டம் குறித்து மாநிலங்களவையில் மத்திய மந்திரி விளக்கம் அளித்தார்.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ஒரு உறுப்பினர், ‘‘அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஊழியர்கள் பணி நேரத்தை 8 மணியில் இருந்து 12 மணி ஆக உயர்த்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதா?’’ என்று கேட்டார்.

அதற்கு மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங், ‘‘அதுபோன்ற திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை’’ என்று பதில் அளித்தார்.

மாநிலங்களவை கேள்வி நேரத்தில், மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் கூறியதாவது:-

இந்திய தூதரகங்கள் அளித்த தகவல்படி, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் 4 ஆயிரத்து 355 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இவர்களில், 127 பேரின் உடல்கள் மட்டும் இறுதி சடங்குக்காக இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன. அதிக அளவாக, சவுதி அரேபியாவில் 1,237 பேர் இறந்துள்ளனர்.

வெளிநாட்டு ஜெயில்களில் 7 ஆயிரத்து 925 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அதிக அளவாக ஐக்கிய அரபு அமீரக ஜெயில்களில் 1,663 இந்தியர்கள் உள்ளனர் என்று அவர் கூறினார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான மர்மம் குறித்த கேள்விக்கு முரளீதரன் கூறியதாவது:-

நேதாஜி தொடர்பான கோப்புகள், ஆவணங்கள் ஆகியவற்றை இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் இருந்து பெற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது என்று அவர் கூறினார்.


Next Story