இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 22.54 லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழப்பு..!
இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 22.54 லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை இந்தியாவில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதில் சுமார் 22.54 லட்சம் பேர் உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சிகரமான தகவலை மக்களவையில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியதாவது:-
புற்றுநோய் என்பது பல்வேறு காரணிகளால் ஏற்படும் ஒரு நோயாகும். குறிப்பாக உயர்ந்து வரும் மக்கள் தொகை, உட்கார்ந்த வாழ்க்கை முறை, புகையிலை பொருட்கள் பயன்படுத்துதல், மது அருந்துதல், ஆரோக்கியமற்று வாழ்க்கைமுறை, காற்று மாசுபாடு ஆகிய காரணிகளால் புற்றுநோய் ஏற்படுகிறது.
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு 13,92,179 பேர், 2019ம் ஆண்டு 13,58,415 பேர், 2018ம் ஆண்டு 13,25,232 பேர் என கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 40,75,826 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 2020ம் ஆண்டு 7,70,230 பேர், 2019ம் ஆண்டு 7,51,517 பேர் மற்றும் 2018ம் ஆண்டு 7,33,139 பேர் என மொத்தம் 22,54,886 பேர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர்.
ஆரோக்கிய நடவடிக்கைகள் மற்றும் இலக்கு தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதன் மூலம் புற்றுநோயை தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 22 புதிய எய்ம்ஸ் மற்றும் பிரதம மந்திரியின் திட்டத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்கள் புற்றுநோயியல் குறித்து கவனம் செலுத்தி வருகின்றன. மேலும் பிரதம மந்திரியின் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் புற்றுநோய்க்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
சுகாதாரத்துறை மந்திரியின் விருப்ப மானியத்தின் கீழ் புற்று நோய் மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை செலவில் அதிகபட்சமாக 1,25,000 ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது' என்று கூறினார்.
Related Tags :
Next Story