இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டு விளக்கம்
பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பு, 2022-23 நீட் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கும் பொருந்தும் என சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தியுள்ளது.
ரிட் மனு தாக்கல்
பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக குஜராத்தைச் சேர்ந்த வருண் திலீப்பாய் பட் உள்ளிட்ட 4 பேர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரவிந்த் பி.தத்தர், 2022-23-ம் ஆண்டு நீட் முதுநிலை மாணவர் சேர்க்கை கையேட்டில், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து குறிப்பிடப்படவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து புதிதாக ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என வாதிட்டார்.
முதுநிலை மாணவர் சேர்க்கைக்கும்...
அதையடுத்து நீதிபதிகள், பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பு, 2022-23 நீட் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கும் பொருந்தும் என தெரிவித்தனர். அந்த ரிட் மனுவை திரும்பப்பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்தனர். மேலும் இடையீட்டு மனு தாக்கல் செய்யவும் அனுமதி வழங்கினர்.
ஆண்டு வருமான உச்சவரம்பு
இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 7-ந் தேதி பிறப்பித்த உத்தரவில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுதிய மாணவர்களை அடையாளம் காண மத்திய அரசு அறிவிக்கையில் இடம் பெற்ற பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான ரூ.8 லட்சம் என்ற ஆண்டு வருமான உச்சவரம்பை பயன்படுத்தலாம்.
பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினரை கண்டறிய பாண்டே குழு நிர்ணயித்த ரூ.8 லட்சம் என்ற ஆண்டு வருமான உச்சவரம்பின் செல்லுபடிதன்மை தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை மார்ச் 3-வது வாரம் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story