செங்கோட்டை வன்முறை வழக்கில் தொடர்புடைய பஞ்சாப் நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழப்பு..!
டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய பஞ்சாப் நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சோனிபட்,
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள், கடந்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி, குடியரசுத் தினத்தன்று, டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.
சிலர் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டும், கொடிகளை ஏற்றியும் போராட்டம் நடத்தினர். அப்போது காவலர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. செங்கோட்டையில் சீக்கிய மதக் கொடி ஏற்றப்பட்டது.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அங்கு போராட்டத்தை தூண்டியதாக நடிகர் தீப் சித்து குற்றம்சாட்டப்பட்டிருந்தார். இது தொடர்பாக இரண்டு முறை அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்
இந்நிலையில் அரியானா மாநிலம் சோனிபட் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பஞ்சாப் நடிகர் தீப் சித்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குண்ட்லி-மனேசர்-பல்வால் விரைவுச்சாலையில் இந்த விபத்து நடந்ததாகவும், சித்து கார்கோடா மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குண்ட்லி-மனேசர்-பல்வால் (கேஎம்பி) விரைவுச்சாலையில் பிப்லி சுங்கச்சாவடி அருகே நின்று கொண்டிருந்த டிரக் மீது தனது காரை தீப் சித்து மோதியதால் சாலை விபத்தில் உயிரிழந்ததாக அரியானா காவல்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story