கேரளாவில் பரபரப்பு: சபரிமலையில் நடிகர் சிரஞ்சீவி இளம்பெண்ணுடன் சாமி தரிசனம்? - தேவஸ்தானம் மறுப்பு


கேரளாவில் பரபரப்பு: சபரிமலையில் நடிகர் சிரஞ்சீவி இளம்பெண்ணுடன் சாமி தரிசனம்? - தேவஸ்தானம் மறுப்பு
x
தினத்தந்தி 17 Feb 2022 8:48 AM IST (Updated: 17 Feb 2022 8:48 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனத்துக்கு வந்த நடிகர் சிரஞ்சீவியுடன் இளம்பெண் ஒருவர் வந்ததாக சமூக வலைதளங்களில் பரவியதால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம்,

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 12-ந் தேதி திறக்கப்பட்டது. 13-ந் தேதி முதல் வழக்கமான பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வந்தது. 5 நாள் சிறப்பு பூஜைகளுக்கு பின் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று (வியாழக்கிழமை) அடைக்கப்படுகிறது.

இந்தநிலையில் சபரிமலைக்கு வந்த தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கடந்த 13-ந் தேதி சபரிமலையில் சாமி தரிசனம் செய்தார். அப்போது, அவருடன் அவரது மனைவி மற்றும் பீனிக்ஸ் குரூப் உரிமையாளர்களான சுக்கப்பள்ளி சுரேஷ், சுக்கப்பள்ளி கோபி அவர்களது மனைவிகளும் வந்திருந்தனர்.

இவர்களில் 50 வயதை எட்டாத மதுமதி என்பவரை சாமி தரிசனத்திற்கு அனுமதித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுமதி என்பவர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தது உண்மை. அவர் 1966-ம் ஆண்டு பிறந்தவர். சபரிமலை ஆசார முறைப்படி அவர் 50 வயதை கடந்தவர். அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை பரிசோதனை செய்த பின்னரே அவர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான செய்திகள் தவறானது. தவறான செய்திகள் வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே மதுமதியின் மகன் அவிநாஷ் சுக்கப்பள்ளி தனது முகநூலில் எனது தாயாருக்கு 55 வயதாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story