வீடுகளில் பாதுகாப்பாக இல்லாதவர்கள் அங்கு ஹிஜாப் அணிந்துகொள்ளுங்கள் - பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர்


வீடுகளில் பாதுகாப்பாக இல்லாதவர்கள் அங்கு ஹிஜாப் அணிந்துகொள்ளுங்கள் - பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர்
x
தினத்தந்தி 17 Feb 2022 7:29 AM GMT (Updated: 17 Feb 2022 7:29 AM GMT)

வீடுகளில் பாதுகாப்பாக இல்லாதவர்கள் அங்கு ஹிஜாப் அணிந்துகொள்ளுங்கள் என்று பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

போபால்,

கர்நாடகாவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல மாநில அரசு தடை விதித்தது.

இந்த தடையை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வகுப்பிற்கு வருவதற்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஹிஜாப் விவகாரம் குறித்து மத்திய பிரதேசத்தின் போபாலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் கருத்து தெரிவித்தார். 

இது குறித்து அவர் கூறுகையில், “மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லும்போது பள்ளி சீருடையை அணிந்து கல்வி நிறுவனங்களின் ஒழுக்கத்தை கடைபிடிக்கிறார்கள். ஹிஜாப் ஒரு பர்தா. ஹிஜாப் முகத்தை மறைப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது, உங்களை தீய கண்களால் பார்ப்பவர்களுக்கு எதிராக பர்தா பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், ஒன்றை மட்டும் உறுதியாக கூறலாம் பெண்களை வழிபடுவதால் இந்து மதத்தினர் அவர்களை தீய கண்களால் பார்க்கமாட்டார்கள்” என்றார்.
 
இந்தியாவில் பெண்களை வழிபடும் கலாச்சாரம் உள்ளது. பெண்களுக்கு மதிப்பளிக்கும் இந்த நாட்டில் ஹிஜாப் அணிய எதேனும் தேவை உள்ளதா? இந்தியாவில் ஹிஜாப் அணியத் தேவையில்லை. 

வீட்டில் பாதுகாப்பு இல்லாதவர்கள், பிரச்சினைகளை சந்திப்பவர்கள் அங்கு (வீட்டில்) ஹிஜாப் அணிந்துகொள்ளுங்கள்.

மதரசாக்களில் ஹிஜாப் அணிந்தால் எங்களுக்கு என்ன பிரச்சினை? ஆனால், நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளின் ஒழுக்கத்தை சீர்குலைத்தால் அதை பொறுத்துக் கொள்ள முடியாது’ என்றார்.



Next Story