பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து கூறிய வழக்கு: சாமியார் நரசிங்க ஆனந்த் ஜாமீனில் விடுதலை
அரசியலில் உள்ள பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் கைதான சாமியார் நரசிங்க ஆனந்த் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் இந்து மதத்தை சேர்ந்த சில சாமியார்கள் கடந்த கடந்த ஜனவரி மாதம் தர்ம சனாதனம் என்ற பெயரில் இந்து மத சாமியார்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாமியார் யாத்தி நரசிங்க ஆனந்த் உள்பட பல்வேறு இந்து மத சாமியார்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய சாமியார்கள், இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்களை படுகொலை செய்ய வேண்டும் என வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசினர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய நரசிங்க ஆனந்த் உள்பட சாமியர்கள் பலரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில், சாமியார் நரசிங்க ஆனந்த் பெண் அரசியல்வாதிகள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அரசியலில் நீங்கள் பார்க்கும் பெண்கள் குறைந்தது ஒரு ஆண் அரசியல்வாதியுடன் பாலியல் ரீதியில் தொடர்பு வைத்துக்கொண்டுள்ளவர்களாக இருப்பார்கள் அல்லது அந்த பெண் அரசியல்வாதி ஆதிக்கம் நிறைந்த தலைவர்களின் உறவினர்களாக இருப்பார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
பெண் அரசியல்வாதிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது தொடர்பாகவும், ஹரித்வார் வெறுப்பு பேச்சு தொடர்பாகவும் சாமியார் நரசிங்க ஆனந்த் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த நரசிம்ம ஆனந்த் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். வெறுப்புணர்வு பேச்சு தொடர்பான வழக்கில் கடந்த 7-ம் தேதி நரசிம்ம ஆனந்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், பெண்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியவழக்கிலும் ஜாமீன் வழங்கக்கோரி ஹரித்துவார் கோர்ட்டில் சாமியார் நரசிம்ம ஆனந்த் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு நரசிம்ம ஆனந்துக்கு ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து, 2 வழக்கிலும் ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து ஹரித்வார் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாமியார் நரசிம்ம ஆனந்த் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story