சிறையில் உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பில் சரிவு


சிறையில் உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பில் சரிவு
x
தினத்தந்தி 19 Feb 2022 5:07 AM IST (Updated: 19 Feb 2022 5:07 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020-ம் ஆண்டின் உற்பத்தி ரூ.623 கோடி குறைந்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள பெரிய சிறைகளில் கைதிகளை சீர்திருத்துவதற்கும், அவர்களின் மறுவாழ்வுக்காகவும் தொழில் பயிற்சி அளித்து அதன்மூலம் பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன்படி கடந்த 2020-ம் ஆண்டு 42 ஆயிரத்து 976 கைதிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டது. 

இதில் அதிகபட்சமாக 11.6 சதவீதம் பேர் தையல் பயிற்சி பெற்றனர். 10.8 சதவீதம் பேர் வேளாண் பயற்சியும், 8.1 சதவீதம் பேர் தச்சு மற்றும் நெசவு பயிற்சியும் பெற்றனர். இந்த பயிற்சிகள் மூலம் இவர்கள் தயாரிக்கும் பொருட்கள் சந்தை படுத்தப்பட்டு விற்பனை ஆகின்றன. இதற்காக கைதிகளுக்கு கூலியும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு சிறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு குறித்த புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு உள்ளது. இதன்படி மொத்தம் ரூ.223 கோடி மதிப்பிலான பொருட்களை சிறைக்கைதிகள் உற்பத்தி செய்து இருக்கிறார்கள். இதில் மொத்த விற்பனை மதிப்பை எடுத்துக்கொண்டால் தமிழகம் ரூ.66.72 கோடி பொருட்களை விற்பனை செய்து இருக்கிறது. 

கடந்த 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020-ம் ஆண்டின் உற்பத்தி ரூ.623 கோடி குறைவு ஆகும். 2019-ம் ஆண்டு ரூ.846 கோடி மதிப்பிலான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. விற்பனையை பொறுத்தவரை ரூ.599 கோடிக்கு விற்பனை செய்து தெலுங்கானா முதலிடமும், ரூ.73 கோடிக்கு விற்பனை செய்து தமிழகம் 2-வது இடமும் பிடித்தன. 2019-ம் ஆண்டைவிட 2020-ம் ஆண்டு உற்பத்தி குறைந்ததற்கு கொரோனா தொற்று பரவலே காரணம் என கண்டறியப்பட்டு உள்ளது.

Next Story