பா.ஜ.கவை எதிர்கொள்ள காங்கிரஸ் அல்லாத கூட்டணியா..? சிவசேனா எம்.பி விளக்கம்!
மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவை தெலங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் சந்தித்தார்.
புதுடெல்லி,
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜியும், தெலங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதன்தொடர்ச்சியாக, பாஜக அல்லாத மாநில முதல்வர்கள், முக்கிய கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகிறார் சந்திரசேகர் ராவ். ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவுக்கு பின்னர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்களை ஒருங்கிணைத்து கூட்டம் ஒன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில், நேற்று மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவை சந்திரசேகர் ராவ் சந்தித்தார்.
இந்த நிலையில், இந்த சந்திப்பு குறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பேசுகையில், “பாஜகவுக்கு எதிரான கூட்டணி குறித்த பேச்சுகளுக்கு மத்தியில், காங்கிரஸ் இல்லாமல் அரசியல் முன்னணி இல்லை என்பதை சிவசேனா வலியுறுத்தி வருகிறது.
காங்கிரஸ் கட்சி இல்லாத அரசியல் முன்னணி அமைப்பது குறித்து எந்த பேச்சும் இல்லை. காங்கிரஸ் இல்லாத அரசியல் முன்னணி உருவாகும் என்று நாங்கள் கூறவில்லை.
மம்தா பானர்ஜி ஒரு அரசியல் முன்னணியை பரிந்துரைத்த நேரத்தில், காங்கிரசை அழைத்துச் செல்வது குறித்து பேசிய முதல் கட்சி சிவசேனாதான்.
அனைவரையும் அழைத்துச் சென்று வழிநடத்தும் திறன் தெலங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவுக்கு உள்ளது.”
இவ்வாறு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.
முன்னதாக, மராட்டிய மாநில முதல் மந்திரி உத்தவ் தாக்கரே(சிவசேனா கட்சி) - சந்திர சேகர் ராவ்(தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி) சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. மேலும், இரு தலைவர்களும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல விஷயங்களில் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளனர். இந்த சந்திப்பு பாஜகவுக்கு எதிரான தேசிய அளவிலான அரசியல் ஒற்றுமையை துரிதப்படுத்தும் என்று சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
சிவசேனா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே உடனான சந்திப்புக்கு பிறகு, சந்திரசேகர ராவ் மும்பையில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரையும் நேரில் சந்தித்து பேசினார்.
Related Tags :
Next Story