கொரோனா சாதாரண தொற்றாக மாறுவதற்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது - நிபுணர் கருத்து


கொரோனா சாதாரண தொற்றாக மாறுவதற்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது - நிபுணர் கருத்து
x
தினத்தந்தி 23 Feb 2022 4:50 AM IST (Updated: 23 Feb 2022 4:50 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தபோதும், இது எப்போது சாதாரண உள்ளூர் தொற்றாக மாறும் என்பதற்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்று நிபுணர் கூறி உள்ளார்.

புதுடெல்லி,

தற்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல், ஆஸ்பத்திரி சேர்க்கை, பலி என அனைத்தும் குறைந்து வருகிறது.

இந்த தருணத்தில் கொரோனா தொற்று நோய் உள்ளூர் தொற்றாக மாறி வருகிறதா என்பது தொடர்பாக இணையவழி கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா, மேற்கு வங்காள பல்கலைக்கழக சிறப்பு பேராசிரியர் டாக்டர் நரேஷ் புரோகித் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரசானது பெருந்தொற்று நிலையில் இருந்து உள்ளூர் தொற்றாக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நோய் தொடர்ந்து பழக்கத்தில் இருக்கும். சூழ்நிலைகள் வைரசுக்கு சாதகமாகவும், மனிதர்களுக்கு குறைவான சாதகமாகவும் இருக்கும்போது ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்.

குளிர்காலத்தில் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், பருவம் மாறுபடுகிறபோது டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இதே போன்று கொரோனாவும் பருவ நோயாக மாறி பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு நோயை ஏற்படுத்தலாம்.

தொழில்நுட்ப ரீதியாக கொரோனா உள்ளூர் தொற்றாக மாறுமா என்பதை நிர்ணயிக்க செரோ சர்வே மற்றும் ஆய்வுக்கூட உணர்திறன் ஆய்வுகள் தேவைப்படும்.

பெரும்பாலான மக்கள் ஏற்கனவே கொரோனா தாக்கியோ அல்லது தடுப்பூசி போட்டுக்கொண்டோ கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்புச்சக்தியை கொண்டிருப்பதாக கண்டபிறகுதான் இந்த நோய் உள்ளூர் தொற்றாக மாறுவதை காண முடியும். இதில் காலக்கெடு வழங்க முடியாது.

செரோ சர்வே 90 சதவீதத்துக்கு மேல் பாசிட்டிவ் தன்மையைக் காட்டினால் இது உள்ளூர் தொற்றாக மாறி விட்டது என கருதலாம். ஆனால் இந்த நோய் எதிர்ப்பு பொருள், தற்போது பலவிதமான கொரோனா மாறுபாடுகளுக்கு எதிராக திறம்பட பாதுகாக்க முடியுமா என்பதையும் நாம் பார்க்க வேண்டும். உள்ளூர் தொற்றாக நோய் பரவக்கூடியதாக மாறினால், அது பாதிப்பு இல்லாதது என்று அர்த்தம் அல்ல.

உள்ளூர் தொற்று என்றால் எப்படியாவது நோய் கிருமியைக் கட்டுப்படுத்தி விட்டதால், வாழ்க்கை சாதாரண இயல்பு நிலைக்கு திரும்பும் என்று அர்த்தம் கிடையாது. இது உறுதிப்படுத்தப்பட்ட நிலையான தன்மையை பரிந்துரைக்கவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story