உக்ரைனில் கேரள மாணவர்கள் 2,320 பேர் சிக்கித்தவிப்பு...!


உக்ரைனில் கேரள மாணவர்கள் 2,320 பேர் சிக்கித்தவிப்பு...!
x
தினத்தந்தி 25 Feb 2022 4:36 AM IST (Updated: 25 Feb 2022 4:36 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் சிக்கித்தவிக்கும் கேரள மாணவர்கள் 2,320 பேரை விரைவில் மீட்க முதல்-மந்திரி பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவனந்தபுரம்,

ரஷியாவின் தாக்குதலால் போரை எதிர்கொண்டுள்ள உக்ரைனில் இந்திய குடிமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் ஆயிரக்கணக்கில் சிக்கியுள்ளனர். குறிப்பாக கேரளாவில் இருந்து 2,320 மாணவ-மாணவிகள் உக்ரைனில் சிக்கித்தவிப்பதாகவும், அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்-மந்திரி பினராயி விஜயன் கோரிக்கை விடுத்து உள்ளார்.

இதுதொடர்பாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘உக்ரைனின் தற்போதைய நிலவரம் குறித்து நாங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளோம். அத்துடன் நமது மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்விச்சூழலும் மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது’ என குறிப்பிட்டு உள்ளார். எனவே இந்த விவகாரத்தில் தலையிட்டு, நாடு திரும்ப விரும்பும் மாணவர்களை மீட்டு வரவும், கல்விக்காக அங்கேயே தங்கியிருக்க விரும்பும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறும் பினராயி விஜயன் அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இதற்கிடையே கர்நாடகத்தை சேர்ந்த மாணவர்கள் 10 பேர் உக்ரைனில் சிக்கியிருப்பதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் ஜெய்சங்கருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story