உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு
உக்ரைனில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களும், இந்தியர்களும் சிக்கித் தவித்து வருகின்றனர்.
புதுடெல்லி,
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வக்கீல் விஷால் திவாரி தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. இதுபோன்ற சூழலில் உக்ரைனில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களும், இந்தியர்களும் சிக்கித் தவித்து வருகின்றனர்.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உதவும் பொருட்டு தேவையான ராஜதந்திர நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், தங்குமிட வசதிகளை உருவாக்குவதை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
உக்ரைனில் மருத்துவம் பயிலும் மாணவர்களின் ஆன்லைன் மருத்துவப் படிப்பை அங்கீகரிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த பொதுநல மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story