குறைந்து வரும் கொரோனா: ‘எல்லா வகையான கட்டுப்பாடுகளையும் தளர்த்துங்கள்’ - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை


குறைந்து வரும் கொரோனா: ‘எல்லா வகையான கட்டுப்பாடுகளையும் தளர்த்துங்கள்’ - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை
x
தினத்தந்தி 26 Feb 2022 5:55 AM IST (Updated: 26 Feb 2022 5:55 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி எல்லா வகையான கட்டுப்பாடுகளையும் தளர்த்துமாறு மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

புதுடெல்லி, 

ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்டு எழுச்சி பெற்ற கொரோனாவின் 3-வது அலை ஓய்ந்து வருகிறது. இந்த நிலையில், மார்ச் மாதத்துக்கான கொரோனா கால வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து வகை கட்டுப்பாடுகளிலும் தளர்வுகளை வழங்குமாறு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதையொட்டி மாநில அரசு தலைமைச்செயலாளர்களுக்கும், யூனியன் பிரதேச தலைமைச்செயலாளர்களுக்கும் மத்திய அரசின் உள்துறைச்செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதி உள்ளார்.

அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

* உள்ளூர் நிலைமையை கவனமாக ஆராய்ந்து, சமூக, விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசாரம், மதம், திருவிழா தொடர்பான கூட்டம் கூடுதல், இரவு ஊரடங்கு, பொது போக்குவரத்து இயக்குதல், வணிக வளாகங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், உணவுவிடுதிகள், பார்கள், பள்ளிகள்-கல்லூரிகள்-அலுவலகங்கள் திறப்பு மற்றும் வணிக செயல்பாடுகள் ஆகியவற்றில் தளர்வுகளை வழங்குங்கள்.

* முககவசம் அணிதல், கைச்சுத்தம் பராமரித்தல், மூடிய இடங்களில் காற்றோட்ட வசதி ஆகியவை தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும்.

* மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்தபடி பொருளாதார நடவடிக்கைகளை திறப்பதன் அடிப்படையில் இடர் மதிப்பீட்டு அணுகுமுறையை செயல்படுத்துங்கள்.

* கொரோனா பரிசோதனை, கண்காணிப்பு, மருத்துவ சிகிச்சை, தடுப்பூசி, கொரோனா கால பொருத்தமான நடைமுறைகளை தொடர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story