கணவன் கொலை; உடலை செப்டிக் டேங்கில் வீசிய மனைவி-மகன் கைது!


கணவன் கொலை; உடலை செப்டிக் டேங்கில் வீசிய மனைவி-மகன் கைது!
x
தினத்தந்தி 26 Feb 2022 8:37 AM IST (Updated: 26 Feb 2022 8:37 AM IST)
t-max-icont-min-icon

தன்னை துன்புறுத்தி, துரோகம் செய்ததால் கணவரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தனது கணவரை கொன்று, அவரது உடலின் பாகங்களை வீட்டின் செப்டிக் டேங்கில் வீசிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை இரவு குடிபோதையில் இருந்த அவரது மகன் பிரசாந்த் ஜடோன், அவரது நண்பர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, தன் தந்தையை, தாய் கொலை செய்தது போல இதுவும் யாருக்கும் தெரியாது என மிரட்டியுள்ளார். இதுபற்றி அவரது நண்பர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். 

நேற்று காலை, போலீசார் சுனிதாவை பிடித்து விசாரித்ததில், பிப்ரவரி 5 ஆம் தேதி டிரைவரான தனது கணவர் பப்லு ஜடோனை, தனது நண்பர்களான ரிஸ்வான் கான் மற்றும் பாய்யு ஆகிய இரு நண்பர்களின் உதவியோடு கொன்றதாக சுனிதா ஒப்புக்கொண்டதாக போலீசார் கூறினர்.

பப்லு தன்னை துன்புறுத்தியதாகவும், துரோகம் செய்ததாக குற்றம் சாட்டிய அந்த பெண், தன் செயலுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை என்றார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், பிப்ரவரி 5 ஆம் தேதி பப்லுவின் உணவில் சுனிதா விஷம் கலந்து கொடுத்தார். அவர் சுயநினைவை இழந்தபோது, சுனிதாவும் ரிஸ்வானும் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர், இந்தூரில் இறைச்சி கடை வைத்திருக்கும் ரிஸ்வானும், பையுவும், பப்லுவின் உடலை ஐந்து துண்டுகளாக வெட்டினர்.  இதனை பார்த்த சுனிதாவின் மகன், எதிர்ப்பதற்கு பதிலாக, தன் தாய்க்கு உதவி செய்துள்ளார்” என்று போலீசார் கூறினர்.

மேலும் ரிஸ்வானும் பையுவும் கொலை செய்யப்பட்ட நபரின் கால்களையும் கைகளையும் தேவாஸ் காட்டில் வீசியுள்ளனர். பிப்ரவரி 6 ஆம் தேதி சுனிதா தனது வீட்டில் கட்டிய செப்டிக் டேங்கில் உடல் மற்றும் தலை  புதைக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி கூறினார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுனிதா மற்றும் அவரது மகன் பிரசாந்த் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய ரிஸ்வான் மற்றும் பையுவை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story