கிழக்கு உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க உடனடி நடவடிக்கை தேவை; பிரதமர் மோடிக்கு கேரள முதல்-மந்திரி கடிதம்!


கிழக்கு உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க உடனடி நடவடிக்கை தேவை; பிரதமர் மோடிக்கு கேரள முதல்-மந்திரி கடிதம்!
x
தினத்தந்தி 2 March 2022 8:56 PM IST (Updated: 2 March 2022 8:56 PM IST)
t-max-icont-min-icon

இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற ரஷிய தலைமையுடன் பிரதமர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

திருவனந்தபுரம்,

உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களுக்காக அவர்கள் பாதுகாப்பாக வெளியேற மனிதாபிமான நடைபாதை அமைத்திட ரஷிய தலைமையுடன் பிரதமர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:-

ஒன்றிய அரசின் ஆபரேசன் கங்கா முயற்சி நடவடிக்கைக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். அதன்மூலம் 244 கேரள மாணவர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். மேலும் பலர் வந்து கொண்டிருக்கின்றனர்.

பிரதமருக்கு நாங்கள் முன்வைக்கும் கோரிக்கை என்னவெனில், ஆயிரக்காணக்கான இந்திய மாணவர்கள் கார்கிவ், சுமி மற்றும் கிழக்கு உக்ரைனின் பிற பகுதிகளில்  சிக்கியுள்ளனர்.

கீவ் மற்றும் பாதுகாப்பான பகுதிகளாக கருதப்படும் மேற்கு உக்ரைன் பகுதிகளுக்கே மீட்பு பணிகளில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.அதேசமயம்  கிழக்கு உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ளது.

யுத்தத்திற்கு மத்தியில் சிக்கியுள்ள நம் மாணவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவான வழிமுறைகள் ஏதும் கொடுக்கப்படவில்லை.

அச்சத்தால் பல மாணவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து மேற்கு உக்ரைன் பகுதிகளுக்கு செல்ல தாமாகவே முடிவெடுத்து  முயன்று வருகின்றனர் 

பதுங்கு குழிகளில் தஞசம் அடைந்துள்ள மாணவர்கள் உணவு தண்ணீரின்றி பரிதவித்து வருகின்றனர்.
முன்னதாக எழுதிய கடிதத்தில், கிழக்கு உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை ரஷியா வழியாக உடனடியாக மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இப்போது இந்த கடிதத்தில், ரஷிய தலைமையுடன் உங்களுடைய தனிப்பட்ட நடவடிக்கை மூலமாக நமது மாணவர்கள் யுத்த வளையத்திலிருந்து வெளிவருவதற்கு மனிதாபிமான வழித்தடத்தை அமைத்திட வேண்டும்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உட்பட பல தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் மூலம் அவர்களுக்கு போதிய உணவு தண்ணீர் கிடைக்க செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story