பீகாரில் பட்டாசு தயாரிக்கும்போது வெடி விபத்து: உயிரிழப்பு 12 ஆக உயர்வு
பீகார் மாநிலத்தில் பட்டாசு தயாரிக்கும்போது வெடி விபத்து ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தனர்.
பாட்னா,
பீகாரின் பகல்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கஜ்பாலிசாக் பகுதியில் வசித்து வரும் மகேந்திர மண்டல் என்பவர் தனது வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசு தொழிற்சாலையை நடத்தி வந்துள்ளார். இவரது வீட்டில் நேற்று காலையில் பட்டாசு தயாரித்துக்கொண்டு இருந்தபோது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
அங்கிருந்த வெடிபொருட்கள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதில் மண்டலின் வீடு உள்பட 3 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. அங்கு பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இந்த இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு மீட்பு பணிகளை மேற்கொண்டனர். அவர்கள் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் கட்டிட இடிபாடுகளை அகற்றி படுகாயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.
நீண்ட காலமாக சட்ட விரோதமாக பட்டாசு தொழிற்சாலையை நடத்தி வந்த மகேந்திர மண்டலின் வீட்டில் கடந்த 2008-ம் ஆண்டிலும் இதைப்போல வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. அப்போது அவரது மனைவி உள்பட 3 பேர் உயிரிழந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story