உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி 35 நிமிடம் உரையாடல்..! பேசியது என்ன..!
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், 21-ம் நூற்றாண்டு இதுவரை கண்டிராத உக்கிர போராக மாறி வருகிறது.
வாஷிங்டன்
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், 21-ம் நூற்றாண்டு இதுவரை கண்டிராத உக்கிர போராக மாறி வருகிறது. ராணுவ கட்டமைப்புகளை தகர்க்கத்தான் நடவடிக்கை என்று சொல்லிக்கொண்டு ரஷியா களம் இறங்கினாலும் முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகிறது. இந்த 11 நாள் போரில் 15 லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, சுலோவாகியா, ஹங்கேரி, மால்டோவா இன்னபிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் உக்ரைனின் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார். இந்த பேச்சின்போது, வடகிழக்கு உக்ரைனின் முக்கிய நகரமான சுமி நகரில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க உதவி செய்யுமாறு உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்துள்ளார்.
ரஷிய - உக்ரைன் படைகளுக்கு இடையே கடும் சண்டை நடைபெற்று வரும் சுமி நகரில் மட்டும் சுமார் 700 இந்திய மாணவர்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தலைவர்களுக்கு இடையேயான பேச்சு 35 நிமிடம் நீடித்ததாகவும், கடுமையான போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உக்ரைனிலிருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவி செய்தமைக்காக, உக்ரைன் அரசுக்கு தனது நன்றியையும் மோடி தெரிவித்துக் கொண்டார்.
மேலும், உக்ரைனின் சுமி நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க தொடர்ந்து உதவுமாறு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். மேலும், உக்ரைனில் தற்போது நிலவும் சூழலை சீரமைப்பது தொடர்பாகவும் இரு தலைவர்களும் பேசியதாகவும் கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷிய படைகள் போர்தொடுத்த பிறகு, பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் இடையே நடைபெறும் இரண்டாவது தொலைபேசி உரையாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story