பொதுத்துறை நிறுவனங்களின் உபரி நிலங்களில் இருந்து வருவாய் ஈட்டும் திட்டம்..! - மந்திரிசபை ஒப்புதல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 10 March 2022 3:56 AM IST (Updated: 10 March 2022 3:56 AM IST)
t-max-icont-min-icon

பொதுத்துறை நிறுவனங்களின் உபரி நிலங்களில் இருந்து வருவாய் ஈட்டும் திட்டத்திற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லி, 

விற்பனை செய்யப்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களின் உபரி நிலங்கள் மற்றும் கட்டிடங்களை பணமாக்குவதற்காக தேசிய நிலம் பணமாக்கும் கழகம் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அரசு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் கணிசமான உபரி சொத்துகளை வைத்துள்ளன. பயன்பாடு இல்லாமலும், குறைவான பயன்பாடுடனும் நிலங்களாகவும், கட்டிடங்களாகவும் அவை உள்ளன.

அவற்றில் விற்பனை செய்யப்பட்டு வரும் அல்லது மூடும் நிலையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் இதர அரசு நிறுவனங்களுக்கு சொந்தமான உபரி நிலங்களையும், கட்டிடங்களையும் பணமாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேசிய நிலம் பணமாக்கும் கழகம் உருவாக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய நிலம் பணமாக்கும் கழகம், முற்றிலும் இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமாக செயல்படும். ஒப்புதல் அளிக்கப்பட்ட பங்கு மூலதனமாக ரூ.5 ஆயிரம் கோடியுடனும், செலுத்தப்பட்ட பங்கு மூலதனமாக ரூ.150 கோடியுடனும் இந்த நிறுவனம் உருவாக்கப்படுகிறது.

பொதுத்துறை நிறுவனங்களின் உபரி நிலங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அவற்றை பணமாக்கும் பணியை இந்த நிறுவனம் மேற்கொள்ளும்.

அதில், அரசு அதிகாரிகளும், நிபுணர்களும் அடங்கிய இயக்குனர்கள் வாரியம் அமைக்கப்படும். தகுதி அடிப்படையில் தலைவரும், அரசு சாரா இயக்குனர்களும் நியமிக்கப்படுவார்கள்.

உபரி நிலங்களை பணமாக்குவதன் மூலம் மத்திய அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும். அந்த நிலங்களின் மதிப்பும் உயரும். அங்கு தனியார் முதலீட்டை ஈர்க்கலாம்.

புதிய பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கி விடவும், உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதிஆதாரம் திரட்டவும் உதவும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 13-ந் தேதி, 5-வது ஆயுர்வேத தினத்தையொட்டி பிரதமர் மோடி முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், இந்த மையம் அமைக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ராஸ் அதானம் கிப்ரியசஸ் அறிவித்தார். அதற்கேற்ப இந்த மையம் தொடங்கப்படுகிறது.

மத்திய ஆயுஷ் அமைச்சகம் இதை உருவாக்கும். பாரம்பரிய மருத்துவத்துக்கென உலக அளவில் அமைக்கப்படும் முதலாவது மற்றும் ஒரே மையம் இதுவாகும்.

இந்த மையம், தரமான, பாதுகாப்பான பாரம்பரிய மருத்துவம் அளிக்கப்படுவதை உறுதி செய்யும். பாரம்பரிய மருத்துவம் தொடர்பான விவகாரங்களில் உலக நாடுகளுக்கு உதவும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story