வெளிநாட்டில் இருந்து 71 போதைப்பொருள் கேப்சூல்களை விழுங்கி கடத்தி வந்த பயணி - மும்பையில் கைது


வெளிநாட்டில் இருந்து 71 போதைப்பொருள் கேப்சூல்களை விழுங்கி கடத்தி வந்த பயணி - மும்பையில் கைது
x
தினத்தந்தி 11 March 2022 7:00 AM IST (Updated: 11 March 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் இருந்து மும்பைக்கு போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த பயணி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

வெளிநாட்டில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக விமான புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் சர்வதேச விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் அங்கு வந்த விமானத்தில் இறங்கிய காங்கோ நாட்டை சேர்ந்த இமைகா பேபிரிஸ் என்ற பயணியை அதிகாரிகள் வழிமறித்து உடைமைகளில் சோதனை நடத்தினர்.

இச்சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.14 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மேலும் சோதனை நடத்திய போது அலாரம் ஒலி எழுப்பியது. அதிகாரிகள் பயணியை எக்ஸ்ரே மூலம் நடத்திய சோதனையில் வயிற்றுக்குள் கேப்சூல்கள் இருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதித்து டாக்டர்களின் உதவியுடன் வயிற்றுக்குள் இருந்த 71 கேப்சூல்களை மீட்டனர். மெத்தகுயிலான் என்ற இந்த போதைப்பொருளின் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் ஆகும். இதையடுத்து விமான புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவரை சாகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய வேறு யாரேனும் உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 2 கிலோ எடையுள்ள போதைப்பொருளின் மொத்த மதிப்பு ரூ.15 கோடியே 20 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story