பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி; கெஜ்ரிவாலுடன் முதல்-மந்திரி வேட்பாளர் பகவந்த் மான் சந்திப்பு
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பகவந்த் மான் டெல்லியில் கெஜ்ரிவாலை இன்று சந்தித்து பேசுகிறார்.
சங்ரூர்,
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. பஞ்சாப் மாநில முதல்- மந்திரியான சரண்ஜித்சிங் சன்னி, தான் போட்டியிட்ட சப்காப் சாஹிப் மற்றும் பதார் ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளிலும் தோல்வி கண்டார்.
துரி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் முதல் மந்திரி வேட்பாளர் பகவந்த் மான் 58 ஆயிரத்து 206 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன்பின் வெற்றி உரையாற்றிய பகவந்த் மான் தன்னுடைய பதவியேற்பு விழா சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பூர்வீக கிராமமான நவன்சகர் மாவட்டத்தில் உள்ள கட்கர்காலனில் நடைபெறும்
அரசு அலுவலகங்களில் முதல்வரின் புகைப்படம் இடம்பெறாது என்றும் அதற்கு பதிலாக பகத்சிங், அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெறும் என்றும் கூறினார்.
பதவியேற்ற பிறகு பள்ளிகள், சுகாதாரம், தொழில்துறை, விவசாயத்தை லாபகரமாக்குதல், பெண்களின் பாதுகாப்பு மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றிலிருந்து தான் என்னுடைய முதல்கட்ட நடவடிக்கைகள் தொடங்கும். பஞ்சாபில் ஒரு மாதத்தில் மாற்றத்தை காணத் தொடங்குவீர்கள் என்று கூறினார்.
மக்கள் ஒன்றிணைந்து செயல்படுமாறு வேண்டுகோள் விடுத்த அவர், ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்காதவர்கள் கவலைப்பட தேவையில்லை, ஏனெனில் வாக்களிக்காதவர்களுக்கும் இந்த புதிய அரசாங்கம் பாடுபடும் என்று கூறினார்.
அக்கட்சி 92 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. காங்கிரசுக்கு (18 தொகுதிகள்) 2வது இடம் கிடைத்து உள்ளது. இதனை தொடர்ந்து, பகவந்த் இன்று காலை புதுடெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவர், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலை இன்று சந்தித்து பேசுகிறார். இதுபற்றி டெல்லி புறப்படும் முன் செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த், எங்கள் கட்சி நிறுவனர் கெஜ்ரிவாலை சந்திக்க இன்று நான் டெல்லி செல்கிறேன் என கூறினார்.
பதவியேற்பு நிகழ்ச்சிக்கான தேதி பற்றி இன்று மாலை அறிவிப்பு வெளியிடப்படும். எங்களுடைய சட்டசபை கட்சி கூட்டம், நாங்கள் விரும்பும்போது எப்போது வேண்டுமென்றாலும் கூட்டப்படும். நாங்கள் அவசரப்பட வேண்டியதில்லை. கவலைப்படவும் தேவையில்லை. எங்களுடைய எம்.எல்.ஏ.க்கள் நேர்மையானவர்கள். அவர்கள் வேறு மாநிலங்களுக்கு ஓடமாட்டார்கள் என குதிரை பேர அரசியலை சாடி பேசினார்.
Related Tags :
Next Story