‘ஆபரேசன் கங்கா’ நடவடிக்கைக்கு உதவி: ரஷியா, உக்ரைனுக்கு இந்தியா நன்றி
உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் ‘ஆபரேசன் கங்கா’ நடவடிக்கைக்கு உதவியதற்காக உக்ரைன், ரஷியா நாடுகளுக்கும், செஞ்சிலுவைச் சங்கத்துக்கும் இந்தியா நன்றி தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்த 2 நாட்களுக்கு பிறகு, அங்கு சிக்கிய இந்தியர்களை மீட்பதற்காக ‘ஆபரேசன் கங்கா’ நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. இதன் மூலம் 18 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டனர். சுமி நகரில் இருந்து மட்டும் கடந்த செவ்வாய்க்கிழமை சுமார் 600 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் நரேந்திர மோடியின் வழிநடத்தலின்படி மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேசன் கங்கா’ நடவடிக்கை, தலைமைத்துவம், பொறுப்பால் சிறப்பால் முடிக்கப்பட்டது. குறிப்பாக உக்ரைனின் வடகிழக்கு நகரான சுமியில் இருந்து இந்திய மாணவர்களை மீட்பது மிகவும் சவாலாக இருந்தது.
ஒட்டுமொத்தமாக ‘ஆபரேசன் கங்கா’ நடவடிக்கைக்கு உதவிய அனைவருக்கும் நாம் நன்றி தெரிவிக்கிறோம்.
முக்கியமாக உக்ரைன், ரஷியா மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு நமது நன்றி. உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, போலந்து, சுலோவாக்கியா, மால்டோவா ஆகிய நாடுகளும் அசாதாரண உதவியை அளித்தன. அவற்றுக்கும் நாம் நன்றி தெரிவிக்கிறோம்.
மீட்பு நடவடிக்கையில் அயராது உழைத்த அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வ தொண்டர்கள், நிறுவனங்கள், நமது விமான போக்குவரத்து நிறுவனம் மற்றும் இந்திய விமான படைக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
இந்த பணியில் இணைந்து செயல்பட்ட எனது சக மந்திரிகள் ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு, ஹர்தீப்சிங் பூரி, வி.கே.சிங் ஆகியோரையும், கடினமான போர்ச்சூழலில் அர்ப்பணிப்போடு செயல்பட்ட உக்ரைனில் உள்ள நமது தூதரகம், வெளியுறவுத்துறை அதிகாரிகளையும் பாராட்டுகிறேன்.’
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story