உக்ரைன் போர் எதிரொலி: இந்திய ஏற்றுமதியாளர்கள் பாதிப்பு- நிதின் கட்காரி


உக்ரைன் போர் எதிரொலி: இந்திய ஏற்றுமதியாளர்கள் பாதிப்பு- நிதின் கட்காரி
x
தினத்தந்தி 13 March 2022 4:03 AM IST (Updated: 13 March 2022 4:03 AM IST)
t-max-icont-min-icon

இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் கிழக்கு பிராந்தியம் சார்பில் நடந்த காணொலி அமர்வு ஒன்றில் மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி உரையாற்றினார். அப்போது அவர் உக்ரைன் போரால் இந்திய ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘உக்ரைன் போர் காரணமாக கன்டெய்னர்கள் உள்ளிட்ட தளவாடங்கள் விலை அதிகரித்து இருப்பதும், துறைமுகங்கள் தொடர்பான பிரச்சினைகளும் இந்திய ஏற்றுமதியாளர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. இந்த சிக்கல்கள் காரணமாக, பெரிய ஏற்றுமதிகளுக்கான ஆர்டர்கள் கிடைத்தும் தொழில்துறையால் அவற்றை பயன்படுத்த முடியவில்லை’ என தெரிவித்தார்.

கச்சா எண்ணெயை சார்ந்திருக்கும் நிலைமையை இந்தியா குறைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என தெரிவித்த கட்காரி, இதற்கு பதிலாக பசுமை ஹைட்ரஜன் போன்றவற்றை மாற்று எரிபொருளாக பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

இந்திய ஏற்றுமதித்துறை சர்வதேச சந்தையில் அதிக போட்டித்தன்மையுடன் இருக்கும் வகையில் 35 பன்னோக்கு மாதிரி தளவாட பூங்காக்களை அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


Next Story