கொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 பேர் படுகாயம்..!
கொல்கத்தாவில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைக்கு சொந்தமான குடோன் ஒன்றில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளம் மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவின் டாங்ரா பகுதியில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைக்கு சொந்தமான குடோன் ஒன்றில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
குடோனில் ரெக்சின் (செயற்கை தோல்), சில இரசாயனங்கள், கற்பூர எண்ணெய் மற்றும் ஆல்கஹால் உள்ளிட்ட எரியக்கூடிய பொருட்கள் இருந்ததால் மளமளவென தீ சிறிது நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் பரவியது.
தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொழிற்சாலையின் அருகில் வசித்து வந்த குடிசைவாசிகளை போலீசார் அங்கிருந்து வெளியேற்றினர். 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அந்த பகுதியில் குறுகிய பாதைகளாக இருந்ததால் தீயணைப்பு வீரர்களுக்கு தீயை அணைப்பதில் சிறிது சிரமம் ஏற்பட்டதாக மேற்கு வங்க தீயணைப்பு துறை அமைச்சர் சுஜித் போஸ் கூறினார். மேலும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியில், அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தீயணைப்பு துறையினருக்கு உதவி செய்தனர். ஏறக்குறைய 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தொழிற்சாலையில் பரவிய தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
Related Tags :
Next Story