காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகிறாரா முகுல் வாஸ்னிக்..?
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக முகுல் வாஸ்னிக் பொறுப்பேற்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று காலை அக்கட்சியின் இடைக்கால தலைவரான சோனியாகாந்தி இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ஆனந்த் சர்மா, கே சுரேஷ், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், 5 மாநில தேர்தல் தோல்வி தொடர்பாக காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியும், விரக்தியும் அதிகரித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரமிக்க அமைப்பான காரியக்கமிட்டி கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் கூடுகிறது.
இந்த கூட்டத்திற்கு முன்னதாக, கட்சிக்குள் இருக்கும் அதிருப்தி குழுவினர் கட்சியின் புதிய தலைவராக முகுல் வாஸ்னிக் பொறுப்பேற்க வேண்டும் என்று ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது.
ஆனந்த் சர்மா, குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்டோர் அடங்கிய ஜி 23 குழுவினர், கட்சியின் தலைவர் பதவிக்கு முகுல் வாஸ்னிக் பெயரை பரிந்துரைத்திருந்தனர். ஆனால் அது ஏற்கப்படவில்லை.
இதுகுறித்து அந்த குழுவை சார்ந்த ஒருவர் கூறுகையில், “2000-ம் ஆண்டு காலகட்டத்தின் தொடக்கத்தில் சோனியா காந்தி எப்படி காங்கிரஸ் கட்சியை வழிநடத்தினாரோ, அப்படித்தான் புதிய தலைவர் கட்சியை வழிநடத்த வேண்டும்.
சோனியா காந்தி (இடைக்கால) தலைவராக இருந்தாலும், கே.சி. வேணுகோபால், அஜய் மக்கன் மற்றும் ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் தான் கட்சியை வழிநடத்தி வருகின்றனர்.
ராகுல் காந்தி இப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் இல்லை. ஆனால் அவர் திரைக்குப் பின்னால் இருந்து செயல்படுகிறார் மற்றும் முடிவுகளை எடுக்கிறார். அவர் வெளிப்படையாக எதையும் பேசுவதில்லை.
நாங்கள் கட்சியின் நலன் விரும்பிகள், எதிரிகள் அல்ல” என்றார்.
இதற்கிடையே, இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story