தேர்தல் தோல்விக்கு சோனியா காந்தி மட்டும் பொறுப்பல்ல - மல்லிகார்ஜூன் கார்கே


Image Courtesy : ANI
x
Image Courtesy : ANI
தினத்தந்தி 14 March 2022 11:08 AM IST (Updated: 14 March 2022 11:08 AM IST)
t-max-icont-min-icon

5 மாநிலங்களின் தேர்தல் தோல்விக்கு சோனியா காந்தி மட்டும் பொறுப்பல்ல என்று மல்லிகார்ஜூன் கார்கே கூறியுள்ளார்.

புதுடெல்லி,

சமீபத்தில் நடந்து முடிந்த உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பஞ்சாப்பை ஆம் ஆத்மியும், மீதமுள்ள 4 மாநிலங்களை பா.ஜனதாவும் கைப்பற்றின. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க முடியாததுடன், தன் வசம் வைத்திருந்த பஞ்சாப்பையும் இழந்து விட்டது.

இது காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி முன்னணி தலைவர்களுக்கும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்களில் சிலர் கட்சித்தலைமை மீது விமர்சனங்களை வீசத்தொடங்கி உள்ளனர். குறிப்பாக கட்சியின் அமைப்பு மற்றும் தலைமையில் மாற்றம் கொண்டு வரவேண்டுமென்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, சோனியா காந்தியே காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர்வார் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

'நடந்து முடிந்த 5 மாநில தேர்தலின் தோல்விக்கு சோனியா காந்தி மற்றும் காந்தி குடும்பம் மட்டும் பொறுப்பல்ல; ஒவ்வொரு மாநிலத் தலைவர் மற்றும் எம்.பி தான் பொறுப்பு.  என்று தலைவர் சோனியா காந்தியிடம் நாங்கள் கூறினோம். அவர் மீது மீண்டும் நம்பிக்கை வைத்துள்ளோம், ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை.

கட்சியை வலுப்படுத்துவதற்கான உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. பாஜக மற்றும் அதன் சித்தாந்தத்தை எதிர்த்துப் போராடுவோம்; எங்களின் சித்தாந்தத்தை முன்னிறுத்தி, அடுத்த தேர்தலில் முன்பை விட சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

Next Story