கீவ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு மீது ரஷிய படைகள் தாக்குதல்


Photo Credit: AP/PTI
x
Photo Credit: AP/PTI
தினத்தந்தி 15 March 2022 2:24 PM IST (Updated: 15 March 2022 2:24 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைன் மீது 20-வது நாளாக ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

கீவ்,

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனை தனது ஆளுகையின் கீழ் கொண்டு வரும் நோக்கில் அந்த நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. போரை உடனடியாக நிறுத்தி விட்டு தூதரக ரீதியில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள் என உலக நாடுகள் கூறுவதை தனது காதில் போட்டுக்கொள்ளாத ரஷியா படையெடுப்பின் வேகத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இரவு, பகல் பாராமல் ரஷிய படைகள் நடத்தி வரும் தொடர் குண்டு வீச்சுகளால் உக்ரைன் நகரங்கள் உருக்குலைந்து வருகின்றன. அந்த நாட்டின் முக்கிய விமான நிலையங்கள், ராணுவ தளங்கள், எண்ணெய் கிடங்குகள் ஆகியவை ரஷிய படைகளின் தாக்குதல்களில் நிர்மூலமாக்கப்பட்டு வருகின்றன.

ஆரம்பத்தில் உக்ரைனின் முக்கிய நகரங்களை மட்டும் குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வந்த ரஷிய படைகள் தற்போது பிற நகரங்கள் மீது தாக்குதல்களை விரிவுப்படுத்தியுள்ளனர். சிறிய நகரங்கள் மீது குண்டு மழை பொழிந்து வருகின்றன. 20-வது நாளாக இன்று ரஷிய படைகளின் தாக்குதல்கள் நீடித்து வருகின்றன. 

உக்ரைன் தலைநகர் கீவ் நகரை கைப்பற்ற முனைப்பு காட்டி வரும் ரஷிய படைகள், அந்நகரை நெருங்கிவிட்டன. கீவ் நகரின் மேற்கு பகுதியில் உள்ள  ஸ்வியாடோஷின்ஸ்கி மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி  குடியிருப்பு மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.  அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து தீ மற்றும் கரும்புகைகள் வெளியேறின. தீ அணைப்பு வீரர்கள் , கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரஷிய படைகளின் இந்த தாக்குதலில் ஒருவர் பலியாகியிருப்பதாகவும் மேலும் பலர் சிக்கியுள்ளதாகவும் மீட்பு பணி நடைபெற்று வருகிறது என்றும் மீட்பு பணிக்குழு தெரிவித்துள்ளது. 

உக்ரைன் ராணுவத்தின் ஜெனரல் அலுவலர் வெளியிட்ட தனது பேஸ்புக் பதிவில், “ முக்கிய துறைமுக நகரமான மரியுபோல் நகரை கைப்பற்ற ரஷிய படைகள் தாக்குதல்களை தொடங்கியிருப்பதாகவும் கார்கிவ் நகரின் மையப்பகுதி மீது கிழக்கில் இருந்து பீரங்கி தாக்குதல்களை தொடுத்து வருவதாகவும்” குறிப்பிட்டுள்ளார். 


Next Story