தென் கிழக்கு ஆசியாவில் கொரோனா திடீர் அதிகரிப்பு மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்


தென் கிழக்கு ஆசியாவில் கொரோனா திடீர் அதிகரிப்பு மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
x
தினத்தந்தி 19 March 2022 5:33 AM IST (Updated: 19 March 2022 5:42 AM IST)
t-max-icont-min-icon

தென் கிழக்கு ஆசியா, சில ஐரோப்பிய நாடுகளில் கொரோனா எழுச்சி பெறுவதால், மாநிலங்களையும், யூனியன் பிரதேஷங்களையும் உஷார்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்று வீழ்ச்சிப்பாதையில் தொடர்ந்து பயணிக்கிறது.

கொரோனா எழுச்சி

கொரோனா குறைந்து இருப்பதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் தென் கிழக்கு ஆசியாவில் கொரோனா பாதிப்பு திடீரென சற்றே அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் உஷார்படுத்துகிற வகையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

இன்புளூவன்சா, சுவாச பிரச்சினைகள்...

தென்கிழக்கு ஆசியாவிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா தொற்று எழுச்சி பெற்று வருகிற நிலையில், மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா 16-ந் தேதி உயர் மட்டக்கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில், மாநிலங்கள் மரபணு வரிசை முறை சோதனை, தீவிர கண்காணிப்பு, ஒட்டுமொத்த விழிப்புணர்வில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

எனவே இன்புளூவன்சா போன்ற பிரச்சினைகளையும், தீவிர சுவாச நோய்த்தொற்று பிரச்சினைகளையும் சோதிக்க வேண்டும். அது கொரோனா நிர்வகிப்பில் அரசுக்கு தூண்களாக உள்ளன.

போதுமான எண்ணிக்கையில் மாதிரிகள்...

புதிய உருமாறிய கொரோனா வைரஸ்களை உரிய நேரத்தில் கண்டறிய போதுமான எண்ணிக்கையில் மாதிரிகளை இன்சாகோக் நெட்வொர்க் பரிசோதனைக்கூடங்களுக்கு அனுப்பி வைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நெறிமுறைகளின்படி சோதனைகளை பராமரிக்க வேண்டும், அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் கவனிக்க வேண்டும், பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளை தொடங்கும்போது எச்சரிக்கை குறிப்புகள் தவறாமல் பின்பற்றப்பட வேண்டும்.

தடுப்பூசிக்கு விழிப்புணர்வு...

தொற்று கொத்துகளாக பரவுவதை கண்காணிக்க வேண்டும். அப்படி ஏதேனும் இருந்தால் விதிமுறைகளின்படி சோதனை மற்றும் இன்புளூவன்சா மற்றும் சுவாச பிரச்சினை உடையவர்களை கண்காணிப்பதைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி இயக்கத்தின் சமீபத்திய விரிவாக்கத்தின்படி கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவதற்கு தகுதி உடைய அனைத்து நபர்களும் உத்வேகம் பெறுவதை மாநிலங்கள் உறுதி செய்வது முக்கியம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Next Story