2024ம் ஆண்டு கெஜ்ரிவால் பிரதமராவார்; பஞ்சாப்பில் புதிதாக பதவியேற்ற மந்திரி பேட்டி
வருகிற 2024ம் ஆண்டு கெஜ்ரிவால் பிரதமராவார் என பஞ்சாப்பில் புதிதாக மந்திரி பதவியேற்ற ஹர்ஜோத் சிங் பேட்டியில் கூறியுள்ளார்.
சண்டிகர்,
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பஞ்சாபின் புதிய முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பகவந்த் மான், பகத் சிங் பிறந்த ஊரான கத்கர் கலன் கிராமத்தில் கடந்த 16-ந்தேதி பதவியேற்றார்.
மேலும், பஞ்சாபில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-மந்திரி பகவந்த் மான் உட்பட எம்.எல்.ஏக்கள் அனைவரும் கடந்த 2 தினங்களுக்கு முன் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடைக்கால சபாநாயகர் இந்தர்பீர் சிங் நிஜ்ஜார் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த நிலையில் பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை இன்று காலை 11 மணியளவில் பதவியேற்று கொண்டது.
இதன்படி, அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான பிரம்ம சங்கர் ஜிம்பா, ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ் ஆகியோர் பஞ்சாப் அமைச்சரவைக்கான மந்திரிகளாக முதலில் இன்று பொறுப்பேற்று கொண்டனர். அவர்களை தொடர்ந்து, லால் சந்த் கடாருசக், குர்மித் சிங் மீத் ஹேயர், குல்தீப் சிங் தலிவால், லால்ஜித் சிங் புல்லார், ஹர்பால் சிங் சீமா, டாக்டர் பல்ஜீத் கவுர், ஹர்பஜன் சிங் ஈ.டி.ஓ., டாக்டர் விஜய் சிங்லா ஆகியோரும் மந்திரிகளாக பொறுப்பேற்று கொண்டனர்.
அவர்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்துள்ளார். மந்திரிகள் பதவியேற்றவுடன், பஞ்சாப் சிவில் செயலகத்தில் பொறுப்பேற்கின்றனர்.
பஞ்சாப் அமைச்சரவையில் மந்திரியாக பதவி பிரமாணம் எடுத்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஹர்ஜோத் சிங், இது ஒரு மிக பெரிய பொறுப்பு. அரசியல் மீதான நம்பிக்கையை இளைஞர்களிடையே, கெஜ்ரிவால் மீண்டும் கொண்டு வந்துள்ளார்.
பஞ்சாப்பை, மகாராஜா ரஞ்சித் சிங் ஆட்சியில் இருந்தது போன்று நாங்கள் மீண்டும் உருவாக்க இருக்கிறோம். பஞ்சாப் மாடலை நாங்கள் கொண்டு வர உள்ளோம். வருகிற 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாட்டின் பிரதமராக கெஜ்ரிவால் பதவியேற்றிடுவார் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அனந்த்பூர் சாகிப் தொகுதியில் போட்டியிட்ட பெய்ன்ஸ், முன்னாள் சபாநாயகரான காங்கிரசின் ராணா சிங்கை வீழ்த்தி வெற்றி பெற்றார். வழக்கறிஞராக உள்ள பெய்ன்ஸ், ஆம் ஆத்மியின் முன்னாள் இளைஞர் அணி தலைவராகவும் இருந்துள்ளார்.
Related Tags :
Next Story