உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீன் உடல் கர்நாடகா கொண்டு வரப்பட்டது: முதல் மந்திரி நேரில் அஞ்சலி


உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீன் உடல் கர்நாடகா கொண்டு வரப்பட்டது: முதல் மந்திரி நேரில் அஞ்சலி
x
தினத்தந்தி 21 March 2022 3:39 PM IST (Updated: 21 March 2022 3:39 PM IST)
t-max-icont-min-icon

மாணவர் நவீனின் உடல் இன்று கர்நாடகம் கொண்டு வரப்பட்டது. விமான நிலையம் வந்த நவீன் உடலுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பெங்களூரு, 

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. இந்த போர் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி தொடங்கியது. இதனால் உக்ரைனில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மருத்துவ மாணவர்கள் சிக்கி தவித்தனர். அவர்களை பாதுகாப்பாக அழைத்துவர மத்திய அரசு களத்தில் குதித்தது. சிறப்பு விமானங்கள் மூலம் மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் நகரங்கள் மீது ரஷிய படைகள் தீவிர தாக்குதலை நடத்தின.

இதனால் கார்கிவ் நகரில் சிக்கிய இந்திய மாணவர்கள் பதுங்கி குழிகளில் தங்கி இருந்தனர். கர்நாடகத்தை சேர்ந்த மாணவர் நவீன் (வயது 22) கடந்த 1-ந் தேதி உணவு பொருட்களை வாங்குவதற்கு அங்கிருந்து மேலே வந்து ஒரு கடையின் முன்பு வரிசையில் நின்றிருந்தார். அப்போது ரஷியாவின் ஏவுகணை தாக்குதலில் நவீன் உயிரிழந்தார். அவரது உடல் பதப்படுத்தப்பட்டு கார்கிவ் சவக்கிடங்கில் வைக்கப்பட்டு இருந்தது.

அவரது உடலை இந்தியா எடுத்துவர வெளியுறவுத்துறை தீவிர முயற்சியில் இறங்கியது. அதன் பலனாக மாணவர் நவீனின் உடல் இன்று  கர்நாடகம் கொண்டு வரப்பட்டது.  விமான நிலையம் வந்த நவீன் உடலுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து நவீன் உடல் கர்நாடகம் மாநிலம் ஹவேரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.நவீன் உடலுக்கு பொதுமக்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் உடல் தாவண்கெரே எ.ஸ்.எஸ். மருத்துவ ஆராய்ச்சி கல்வி நிறுவனத்திற்கு தானமாக அளிக்கப்பட உள்ளது.


Next Story