உக்ரைனில் இருந்து 22,500 இந்தியர்கள் நாடு திரும்பினர் - மத்திய அரசு தகவல்
பிப்ரவரி 1 முதல் மார்ச் 11-ந் தேதி வரை உக்ரைனில் இருந்து 22,500 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
உக்ரைன் மீது கடந்த மாதம் 24-ந் தேதி முதல் ரஷியா போர் தொடுத்து உள்ளது. இதனால் பேரிடரில் சிக்கிய உக்ரைன்வாழ் இந்தியர்கள் நாடு திரும்பினர். அவர்களை அண்டை நாடுகளான போலந்து, ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளுக்கு வெளியேற்றி அங்கிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் மத்திய அரசு அழைத்து வந்தது. இதற்கு ‘ஆபேரஷன் கங்கா’ திட்டம் என பெயரிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பியவர்களின் எண்ணிக்கை தொடர்பாக மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய வெளியுறவு இணை மந்திரி வி.கே.சிங் நேற்று எழுத்து மூலம் பதிலளித்தார்.
அவர் கூறுகையில், ‘உக்ரைனில் இருந்து சுமார் 22,500 இந்தியர்கள் கடந்த பிப்ரவரி 1 முதல் மார்ச் 11-ந் தேதி வரை நாடு திரும்பியுள்ளனர். இதற்காக செயல்படுத்தப்பட்ட ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் 90 சிறப்பு விமானங்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு இயக்கப்பட்டன. இதில் விமானப்படையின் 14 விமானங்களும் அடங்கும்’ என்று தெரிவித்தார். ஆபேரஷன் கங்கா திட்டத்தில் இயக்கப்பட்ட விமானங்களுக்கான கட்டணத்தை மத்திய அரசே வழங்கியதாக கூறிய வி.கே.சிங், இதற்காக மாணவர்களிடம் இருந்து எந்த கட்டணமும் வசூலிக்கவில்லை என்றும் கூறினார்.
Related Tags :
Next Story