பிஎஸ்என்எல்-எம்டிஎன்எல் இணைக்கும் முடிவை கைவிடுங்கள் - பிரதமருக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் கோரிக்கை


பிஎஸ்என்எல்-எம்டிஎன்எல் இணைக்கும் முடிவை கைவிடுங்கள் - பிரதமருக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 23 March 2022 6:43 PM IST (Updated: 23 March 2022 6:43 PM IST)
t-max-icont-min-icon

பெரும் கடன் சுமையில் இயங்கி வரும் எம்டிஎன்எல் நிறுவனத்தை பிஎஸ்என்எல் உடன் இணைக்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதுடெல்லி,

எம்டிஎன்எல் நிறுவனத்தை பிஎஸ்என்எல் உடன் இணைக்கும் திட்டத்தை கைவிடுமாறு பிரதமர் மோடிக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

எம்டிஎன்எல் நிறுவனத்தின் ரூ.26,000 கோடி கடனை அரசு ஏற்க வேண்டும் என பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் பரிந்துரைத்துள்ளது. 

மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு நிதியுதவி வழங்குமாறு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அப்போதைய தொலைத்தொடர்புத்துறை செயலாளர் ஜே.எஸ்.தீபக் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஒன்றில் எம்டிஎன்எல் நிறுவனத்தை பிஎஸ்என்எல் உடன் இணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. 

அதில், ‘எம்டிஎன்எல், பிஎஸ்என்எல் ஆகிய இரு நிறுவனங்களும் இத்துறையில் அதிகரித்து வரும் போட்டியின் காரணமாக நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. 

இரு நிறுவனங்களின் இணைப்பிற்கு பணியாளர்கள் மற்றும் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் ஒரு பெரிய சவாலாக உள்ளன.

கடன் சுமையில் சிக்கி தவித்து வரும் எம்டிஎன்எல் நிறுவனத்திற்கு இது நல்ல முடிவாக அமையும்.ஆனால் இந்த இணைப்பால் பிஎஸ்என்எல் மேல் கடன் சுமை அதிகரிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான ட்ராய் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த டிசம்பர் 31 நிலவரப்படி, மொத்த வயர்லெஸ் சந்தாதாரர்களில் எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் 9 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது மீண்டும் இரு நிறுவனங்களை இணைப்பது பற்றி முடிவெடுக்கப்பட்டு வருவதாக தொலைத்தொடர்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story