நான் சிறை செல்ல தயாராக இருக்கிறேன்; என்னுடைய குடும்பத்தினரை துன்புறுத்தாதீர்கள் - உத்தவ் தாக்கரே


கோப்புப் படம் ANI
x
கோப்புப் படம் ANI
தினத்தந்தி 26 March 2022 2:49 AM IST (Updated: 26 March 2022 2:49 AM IST)
t-max-icont-min-icon

நான் சிறை செல்ல தயாராக இருக்கிறேன் ஆனால் என்னுடைய குடும்பத்தினரை துன்புறுத்தாதீர்கள் என்று மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

மும்பை,

அமலாக்க துறை தன்னுடைய மைத்துனருக்கு எதிராக நடவடிக்கை எடுத்த சில நாட்களுக்குப் பிறகு, மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே மாநில சட்டமன்றத்தில்,  பாஜக ஆட்சிக்காக என்னை சிறைக்கு அனுப்பினால் கூட நான் போக தயாராக இருக்கிறேன் ஆனால் என்னுடைய குடும்பத்தினரை துன்புறுத்தக்கூடாது என்று கூறியுள்ளார்.

சட்டசபையில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

அனைவருக்கும் முன்னிலையில் நான் உங்களுக்கு சொல்கிறேன். உங்களுக்கு அதிகாரம் வேண்டும், இல்லையா? அதற்காக பென்டிரைவ்களை சேகரிக்க செல்ல வேண்டாம். அதன் விற்பனை அதிகரிக்கிறது. நான் உங்களுடன் வருகிறேன். என்னுடைய குடும்ப உறுப்பினர்களை அவதூறு செய்வது, அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வது போன்ற செயல்களுக்கு நான் பயப்படவில்லை.

உங்கள் குடும்ப உறுப்பினர்களை நாங்கள் அவதூறு செய்யவில்லை. வேண்டுமானால் என்னை சிறையில் அடைத்து வையுங்கள். பாஜக அல்லாத தலைவர்கள் அல்லது அவர்களுடைய உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்ட நபர்களுக்கு விசாரணை கூட வழங்கப்படுவதில்லை.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். நீதிமன்றம் என்ன செய்யும்? அது தனக்கு முன் வைக்கப்பட்ட புனையப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தண்டனையை வழங்குகிறது. சிவசேனாவின் கட்சி ஊழியர்களின் "பாவங்கள்" ஏதேனும் இருந்தால், அதற்கு நான் பொறுப்பேற்க தயாராக இருக்கிறேன்.

1992-92-ல் நடந்த கலவரத்தின் போது உயிரைப் பணயம் வைத்து மும்பையைக் காப்பாற்றிய சிவசேனா தொண்டர்களை துன்புறுத்தாதீர்கள். சில பாஜக தலைவர்கள் மத்திய புலனாய்வு அமைப்புகளின் முகவர்கள் அல்லது செய்தித் தொடர்பாளர்கள் போல் நடந்து கொள்கிறார்கள்.

ஜனநாயகம் மற்றும் சட்டம் ஒழுங்கு கொலை என்று வேறு எதை சொல்ல முடியும்? இந்திரா காந்தி குறைந்தபட்சம் எமர்ஜென்சியை அறிவித்தார். ஆனால் இது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி. நல்லதோ கெட்டதோ, அது வேறு பிரச்சினை. ஆனால் அவருக்கு தைரியம் இருந்தது, அவர் எமர்ஜென்சியை அறிவித்தார்.

பாஜக நாட்டை ஆண்டாலும் மும்பையில் அதிகாரத்தை விரும்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story