தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்


தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 27 March 2022 9:05 AM GMT (Updated: 27 March 2022 9:05 AM GMT)

வேலைநிறுத்தப் போராட்டத்தினால், மின்சேவை பாதிக்காதபடி கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசின் கொள்கைகள் தொழிலாளர்கள் நலனை பாதிக்கும் வகையில் இருப்பதாக கூறி, தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மத்திய மின்சார அமைச்சகம் சார்பில் மாநில அரசுகளுக்கு மின்பராமரிப்பு ஆலோசனை தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தினால், அவசர காலங்களில் செயல்படுவது போல் 24 மணி நேரமும் மின்சேவை பாதிக்காதபடி கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மின்தட்டுப்பாடு குறித்து புகார்கள் வந்தால், அதனை நிவர்த்தி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகள் இயக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதே போல் மருத்துவமனை, ரெயில்வே உள்ளிட்ட முக்கிய இடங்களில் மின்சார தட்டுப்பாடு இல்லாததை உறுதி செய்ய வேண்டும் மத்திய அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

Next Story