வீடு தேடி வரும் ரேஷன் பொருள்: பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் அறிவிப்பு
பஞ்சாப் மாநிலத்தில் வீடு தேடி ரேஷன் பொருள் வழங்கும் திட்டத்தை முதல்-மந்திரி பகவந்த் மான் அறிவித்தார்.
சண்டிகார்,
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. புதிய முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற பகவந்த் மான், அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார்.
வீட்டுக்கே வந்து ரேஷன் பொருள் வழங்கும் திட்டத்தை நேற்று அவர் அறிவித்தார். இதுதொடர்பாக வீடியோ உரையில் அவர் கூறியதாவது:-
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் மக்கள் இன்னும் ரேஷன் கடைகளில் வரிசையில் நின்று பொருட்கள் வாங்கும் அவலம் நீடித்து வருகிறது. சில வயதான பெண்கள், 2 கி.மீ. தூரம் நடந்து சென்று தரமற்ற உணவு தானியங்களை வாங்கி வருகிறார்கள்.
தற்போதைய டிஜிட்டல் காலத்தில், ஒரே ஒரு போன் அழைப்பில், வீட்டுக்கே வந்து உணவு மற்றும் பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகின்றன.
அதுபோல், பஞ்சாப்பில் மக்களுக்கு வீட்டுக்கே சென்று நல்ல தரமான ரேஷன் பொருட்களை வழங்க முடிவு செய்துள்ளோம். எனவே, ரேஷன் கடைகளில் வரிசையில் நிற்கவோ, மற்ற வேலைகளை ஒத்திவைக்கவோ தேவையில்லை.
அரசு அதிகாரிகள், பொதுமக்களை தொலைபேசியில் தொடர்பு கொள்வார்கள். மக்களுக்கு வசதியான நேரத்தில், வீட்டில் இருக்கும் நேரத்தில், வீட்டுக்கே வந்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். இந்த வசதி கட்டாயம் அல்ல. விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பெற்றுக்கொள்ளலாம். முழு விவரங்களும் விரைவில் அறிவிக்கப்படும்.
டெல்லியில் இத்திட்டம் தொடங்கப்பட்டாலும், பாதியில் நிறுத்த வேண்டியதாகி விட்டது. ஆனால், நாங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றுவோம் என்று அவர் கூறினார்.
காணொலி காட்சி மூலம் பேசிய டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ‘‘இந்த திட்டத்தின் வெற்றியை பார்த்து, நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்களுக்கும் இது வேண்டும் என்று கேட்பார்கள்’’ என்று கூறினார்.
Related Tags :
Next Story