பீகார் முதல்-மந்திரி மீது தாக்குதல் நடத்திய நபர் மனநல சிகிச்சை பிரிவில் அனுமதி


பீகார் முதல்-மந்திரி மீது தாக்குதல் நடத்திய நபர் மனநல சிகிச்சை பிரிவில் அனுமதி
x
தினத்தந்தி 29 March 2022 9:01 PM IST (Updated: 29 March 2022 9:01 PM IST)
t-max-icont-min-icon

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் மீது தாக்குதல் நடத்திய நபர் மனநல சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாட்னா, 

பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் நேற்று முன் தினம் பாட்னா அருகே உள்ள பக்தியார்பூர்தான் என்ற பகுதிக்கு சென்றார். அது நிதிஷ்குமார் அவர் குழந்தை பருவத்தில் வசித்த பகுதியாகும்.

அங்கு தனது பழைய நண்பர்களை அவர் சந்தித்து பேசினார். பிறகு உள்ளூர் சுதந்திர போராட்ட வீரர் ஒருவரின் சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த 32 வயதுடைய நபர் நிதிஷ் குமாரின் கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த நிதிஷ்குமாரின் பாதுகாப்பு குழுவினர் மற்றும் போலீசார் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை தாக்கிய வாலிபரை தாக்க வேண்டாம் எனவும் அவர் ஏன் இந்த செயலில் ஈடுபட்டார் என்பதை கண்டுபிடிக்கும்படியும் அதிகாரிகளிடம் நிதிஷ் குமார் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் பக்தியார்பூர்தான் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும், அவருக்கு மனநல பாதிப்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. அந்த நபருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. கணவனுக்கு மனநலக்குறைவு இருந்ததால் அந்த நபரின் மனைவி குழந்தைகளுடன் பிரிந்து சென்றுவிட்டார். மேலும், அந்த நபர் இரு முறை தற்கொலை செய்துகொள்ளவும் முயற்சித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மனநல சிகிச்சைக்காக அந்த நபரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், அந்த நபர் சிகிச்சையின் போது தொடர்ந்து தங்கள் கண்காணிப்பில் இருப்பார் எனவும் சிகிச்சைக்கு பின் அவரிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

Next Story