ஆபாச காட்சிகளை தடுக்க ஓ.டி.டி. தளங்களுக்கு தணிக்கை முறை வேண்டும் - மாநிலங்களவையில் கோரிக்கை
ஆபாச காட்சிகள் காட்டப்படுவதை தடுக்க ஓ.டி.டி. தளங்களுக்கு தணிக்கை முறையை அமல்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் வலியுறுத்தப்பட்டது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில், பட்டய கணக்காளர் சட்டம், செலவு மற்றும் பணிகள் கணக்காளர் சட்டம், கம்பெனி செயலாளர்கள் சட்டம் ஆகியவற்றின் ஒழுங்கு நடவடிக்கை முறையில் மாற்றம் செய்வதற்கான மசோதா மீது நேற்று முன்தினம் விவாதம் நடந்தது.
இந்தநிலையில், நேற்று இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
பட்டய கணக்காளர் நிலையம், கம்பெனி செயலாளர்கள் நிலையம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் மீதான புகார்களை உரிய நேரத்தில் விசாரிக்கவும், ஒழுங்கு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் இந்த மசோதா வழிவகுக்கிறது.
பா.ஜனதா அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எதிராக சி.பி.ஐ.யையும், அமலாக்கத்துறையையும் மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சவுகதா ராய் குற்றம் சாட்டினார். அதற்கு பா.ஜனதா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, சவுகதா ராய் குறிப்பிட்ட சில வார்த்தைகளுக்கு சபாநாயகர் ஓம்பிர்லா ஆட்சேபனை தெரிவித்தார்.
மாநிலங்களவையில் பிஜு ஜனதாதள உறுப்பினர் பிரசன்னா ஆச்சார்யா, ஓ.டி.டி. தள பிரச்சினையை எழுப்பினார். அவர் பேசியதாவது:-
கொரோனா காலத்தில் மற்ற பொழுதுபோக்கு வசதிகள் மூடப்பட்டதால், ஓ.டி.டி. தளங்கள் ஏராளமான பார்வையாளர்களை பெற்றன. அதை பயன்படுத்தி, வெப் சேனல்கள் ஆபாச காட்சிகளை காட்டுகின்றன. ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்துகின்றன. இவை இளம் தலைமுறையினரிடம் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும், இந்த தளங்கள், மத நல்லிணக்கத்துக்கு எதிரான காட்சிகளையும் காட்டுகின்றன. திரைப்படங்களுக்கு தணிக்கை முறை இருப்பதுபோல், ஓ.டி.டி. தளங்களுக்கும், வெப் சேனல்களுக்கும் தணிக்கை முறை இருந்தால் இப்படி நடக்காது. எனவே, அவற்றுக்கும் தணிக்கை முறையை கொண்டுவர வேண்டும் என்று அவர் பேசினார்.
மாநிலங்களவையில் ஏப்ரல், ஜூன், ஜூலை மாதங்களில் 72 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அவர்களில், ஏ.கே.அந்தோணி, ஆனந்த் சர்மா, சுப்பிரமணிய சாமி, நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், ப.சிதம்பரம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
72 பேருக்கும் மாநிலங்களவையில் இன்று (வியாழக்கிழமை) பிரிவு உபசார விழா நடக்கிறது. சபைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்தி பேசுவார்கள்.
இதனால், இன்று மாநிலங்களவையில் கேள்வி நேரமும், நேரமில்லா நேரமும் எடுத்துக்கொள்ளப்படாது என்று வெங்கையா நாயுடு கூறினார்.
அத்துடன், வெங்கையா நாயுடு இல்லத்தில் மாலையில் அனைத்து மாநிலங்களவை எம்.பி.க்களுக்கும் விருந்து அளிக்கப்படுகிறது. 72 எம்.பி.க்களுக்கும் நினைவுப்பரிசு வழங்கப்படுகிறது. விருந்தின்போது, 6 எம்.பி.க்கள் தங்கள் கலைத்திறமையை காட்டுவார்கள். அவர்களில், தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, தமிழ் பாடல் பாடுகிறார்.
Related Tags :
Next Story