மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப்பை பிடித்த போலீசாருக்கு பதவி உயர்வு
மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப்பை பிடித்த போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மும்பை,
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் மார்க்கமாக நுழைந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடும் பயங்கரவாத சம்பவத்தை அரங்கேற்றினர். முக்கிய இடங்களில் நுழைந்து கண்ணில் பட்ட அனைவரையும் சுட்டு வீழ்த்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் 9 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற ஒரே ஒரு பயங்கரவாதியை மட்டும் போலீசார் கடும் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் பிடித்தனர். பின்னர் அவர் தூக்கிலிடப்பட்டார்.
அஜ்மல் கசாப்பை உயிருடன் பிடித்த குழுவில் போலீஸ்காரர் முதல் இன்ஸ்பெக்டர் வரை மொத்தம் 15 அதிகாரிகள் இருந்தனர். அவர்களில் 8 பேர் ஓய்வு பெற்றனர். உதவி சப்-இன்ஸ்பெக்டர் துக்காராம் ஓம்பலே வீர மரணம் அடைந்தார். இந்த துணிச்சலான போலீசாருக்கு பதக்கங்கள், விருதுகள் மற்றும் ரொக்க பரிசுகள் ஏராளமாக கிடைத்தது. இருப்பினும் பதவி உயர்வு பலன்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி அஜ்மல் கசாப்பை பிடித்த போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி 2008-ம் ஆண்டு முதல் அவர்களின் பதவி உயர்வுக்கான சம்பளம் மற்றும் பிற சலுகைகள், நிலுவை தொகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story