இந்தியா - பிரிட்டன் இடையே இன்னும் நெருக்கமான உறவை உருவாக்க விரும்புகிறேன்; பிரிட்டன் வெளியுறவு செயலாளர்


இந்தியா - பிரிட்டன் இடையே இன்னும் நெருக்கமான உறவை உருவாக்க விரும்புகிறேன்; பிரிட்டன் வெளியுறவு செயலாளர்
x
தினத்தந்தி 31 March 2022 11:27 AM IST (Updated: 31 March 2022 11:27 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் ரஷிய சார்புநிலையை இந்தியா குறைத்திடவும் அவர் பேச்சுவார்த்தையில் வலியுறுத்துவார் என்று கூறப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

உக்ரைன் மீதான ரஷிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக, "இந்தியா - பிரிட்டன் இடையே தூதரக உறவை மேம்படுத்தும்" ஒரு பகுதியாக, பிரிட்டன் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் இன்று இந்தியா வந்துள்ளார்.

அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஜி7 நாடுகள் மாநாடு மற்றும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) மாநாடு உள்ளிட்ட முக்கிய உச்சிமாநாடுகளுக்கு சற்று முன்னதாக இந்த பயணம் அமைந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ரஷியாவின் ஆக்கிரமிப்பை எதிர்க்கவும், அந்த நாட்டின் மீதான உலகளாவிய சார்புநிலையை குறைக்கவும் அவர் விரும்புகிறார் என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் ரஷிய சார்புநிலையை இந்தியா குறைத்திடவும் அவர் பேச்சுவார்த்தையில் வலியுறுத்துவார் என்று கூறப்பட்டுள்ளது. 
இந்த நிலையில், இன்று நடைபெறும் “இந்தியா - பிரிட்டன் எதிர்கால வியூக மாநாட்டில்” பிரிட்டன் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் பங்கேற்க உள்ளார்.  

இதுகுறித்து பிரிட்டன் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் கூறியதாவது:-

“பிரிட்டன் மற்றும் இந்தியா இடையேயான ஆழமான உறவு இந்தோ-பசிபிக் மற்றும் உலகளாவிய பாதுகாப்புக்கு உந்துசக்தியாக இருக்கும். இதன்மூலம், வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு வாய்ப்புகள் இருநாடுகளிலும் உருவாகும்.

உக்ரைன் மீதான ரஷியாவின் தூண்டுதலற்ற படையெடுப்பின் பின்னணியில் இது இன்னும் முக்கியமானது. பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற துறைகளில் ‘சுதந்திர ஜனநாயக நாடுகள்’  நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டியதன் பின்னணியில் இது மிகவும் முக்கியமானது.

இந்தியா ஒரு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப சக்தியாக உள்ளது. மேலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மற்றும் பிரிட்டனின் சிறந்த நண்பன். இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் நெருக்கமான உறவை உருவாக்க விரும்புகிறேன்.”

இவ்வாறு தெரிவித்தார்.

“இந்தியா - பிரிட்டன் எதிர்கால வியூக மாநாடு” இன்று நடைபெறுகிறது. அதில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் பிரிட்டன் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் கலந்துகொள்வார்கள்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால உறவுக்கான தங்கள் பார்வையை அமைக்க இருவரும் இந்த மாநாட்டில் உரையாற்றுவார்கள் என்று இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் உயர் கமிஷன் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து,  பிரிட்டன் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ்,  ‘வளர்ந்து வரும் தொழில்நுட்பம்’ குறித்த மந்திரிகள் மட்ட அளவிலான உச்சிமாநாட்டில், அவர் தொழில்நுட்ப உரையாடலை நடத்துவார் என்றும் பிரிட்டிஷ் உயர் கமிஷன் தெரிவித்துள்ளது.

Next Story