உக்ரைன் உடனான போரை நிறுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடி
ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ்வை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
புதுடெல்லி,
உக்ரைன் மீது ரஷியா 37-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.
இந்த போர் உலக நாடுகளின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கத்திய நாடுகள், ஆசிய நாடுகள், வளைகுடா நாடுகள் என பல்வேறு நாடுகளும் இந்த போரில் தங்கள் நிலைப்பாட்டை கவனமாக கையாண்டு வருகின்றன.
இந்த போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகள் மிகவும் கூர்மையாக கண்காணித்து வருகின்றன. இந்த போரில் இந்தியாவை தங்கள் பக்கம் கொண்டு வர அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் மற்றும் ரஷியாவும் முயற்சித்து வருகின்றன. பல்வேறு நாடுகளில் தூதர்கள், வெளியுறவுத்துறை மந்திரிகள் இந்தியாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இதற்கிடையில், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் 2 நாள் பயணமாக நேற்று இரவு இந்தியாவுக்கு வந்துள்ளார். ரஷிய வெளியுறவுத்துறையின் இந்த வருகை உலக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்திய ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிபர் விளாடிமிர் புதினிடம் இருந்து தனிப்பட்ட முறையில் ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புவதாக கூறினார்.
இந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்குமாறு இந்தியா மீது உள்ள சர்வதேச அழுத்தத்திற்கு மத்தியில் பிரதமர் மோடி இன்று மாலை ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்தார். பிரதமர் மோடியும் ரஷிய வெளியுறவுத்துறை மந்திரியும் சுமார் 40 நிமிடங்கள் பேசினர்.
அப்போது பிரதமர் மோடி, உக்ரைன் மீதான போரை நிறுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும் சமாதான முயற்சியில் இந்தியா அதன் பங்களிப்பை வழங்க தயாரக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story