ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்கள் உருவாக்கம்: மொத்த எண்ணிக்கை 26 ஆனது
ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
அமராவதி,
ஆந்திர மாநிலத்தில் தற்போது 13 மாவட்டங்கள் இருக்கின்றன. அவற்றைப் பிரித்து, மேலும் 13 மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.
புதிய மாவட்டங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கப்படுவதாக அரசிதழில் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை வெளியிடப்பட்டதும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணியிடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய மாவட்டங்களுக்கு கலெக்டர்களும், போலீஸ் சூப்பிரண்டுகளும் நியமிக்கப்பட்டனர்.
ஏற்கனவே உள்ள 13 மாவட்டங்களைப் பிரித்து, மொத்தம் 26 மாவட்டங்களை உருவாக்குவதற்கான வரைவு அறிவிக்கையை கடந்த ஜனவரியில் மாநில அரசு வெளியிட்டது. அது தொடர்பான ஆலோசனைகள், எதிர்ப்புகளையும் வரவேற்றது.
கடந்த 2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, தற்போது ஆளுங்கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, தாங்கள் வெற்றி பெற்றால் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஒரு மாவட்டமாக உருவாக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார்.
ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகள் உள்ளன. கிழக்கு கோதாவரி மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள பழங்குடியின மக்கள் பகுதிகளை இணைத்து கூடுதலாக ஒரு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story