புதுமண தம்பதியினரின் போட்டோஷூட் மோகம்: மாப்பிள்ளை ஆற்றில் மூழ்கி பலி; மணப்பெண் பலத்த காயம்!
திருமணமாகி 1 மாதம் கூட முடியவில்லை. அதற்குள் கேமராவுக்கு போஸ் கொடுத்தபோது, தவறி விழுந்து மாப்பிள்ளை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவனந்தபுரம்,
திருமணத்திற்கு பின் நடத்தப்படும் போட்டோஷூட் கேரளாவில் மிகவும் பிரபலம். புதுமணத் தம்பதியினர் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
போட்டோஷூட் எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிடும் ஆர்வம் இன்றைய இளைஞர்கள் இடையே அதிகரித்து வருகிறது. எந்த இடத்தில் போட்டோ எடுக்கவேண்டும் என்று யோசிப்பதில்லை. ஆபத்து ஏற்படும் என்று கூட பார்க்காமல், போட்டோஷூட் எடுக்கும் மோகம் அதிகரித்துள்ளது.
அந்த வகையில், கோழிக்கோடு ஜானகிகாடு அருகே குட்டியாடி ஆற்றில் போட்டோஷூட்டுக்காக, கேமராவுக்கு போஸ் கொடுத்தபோது, பாறையில் இருந்து தவறி விழுந்து மாப்பிள்ளை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் இன்று காலை 7 மணியளவில் நடந்தது.
சம்பவத்தின் போது மணப்பெண்ணும் தவறி விழுந்தார், ஆனால் அவர் காப்பாற்றப்பட்டு பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிரிழந்தவர் பெரம்பரை அருகே உள்ள கடியங்காட்டைச் சேர்ந்த ரெஜில் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது குறித்து பெருவண்ணாமுழி போலீசார் கூறுகையில், அப்பகுதியில் உள்ள குட்டியடி ஆறு, சுற்றுலா பயணிகள் அதிகளவில் மரணம் அடையும் தலமாக மாறி உள்ளது. பல சுற்றுலாப் பயணிகள் தண்ணீருக்கு அடியில் உள்ள ஆழமான குழிகளை அறியாமல் இறங்கிவிடுகின்றனர்.
நீச்சல் தெரியாத ரெஜில், அந்த குழி ஒன்றில் சிக்கி உயிரிழந்தார்.இந்த வழக்கில் மேலும் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story