சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில்மனு


சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில்மனு
x
தினத்தந்தி 7 April 2022 1:49 AM IST (Updated: 7 April 2022 1:49 AM IST)
t-max-icont-min-icon

சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு ஜூன் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், கடந்த அக்டோபரில் அளித்த புகாரில் பதிவான வழக்கில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சிவசங்கர் பாபா சார்பில் வக்கீல் ஸ்வாதி ஜிந்தல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு கடந்த மார்ச் 8-ந்தேதி விசாரித்தது. மேல்முறையீட்டு மனு தொடர்பாக 2 வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

அதன்படி தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டால், சாட்சிகளை அச்சுறுத்தி ஆதாரங்களை கலைத்துவிடுவார். வழக்கு விசாரணையில் இருந்து தப்பித்துக்கொள்ள அவர் வெளிநாடு செல்ல அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.

எனவே சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை (8-ந்தேதி) மீண்டும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story