ராஜஸ்தான்; தீப்பற்றி எரிந்த கட்டிடத்தில் இருந்து குழந்தை உட்பட 4 பேரை காப்பாற்றிய போலீசுக்கு பதவி உயர்வு!


ராஜஸ்தான்; தீப்பற்றி எரிந்த கட்டிடத்தில் இருந்து குழந்தை உட்பட 4 பேரை காப்பாற்றிய போலீசுக்கு பதவி உயர்வு!
x
தினத்தந்தி 7 April 2022 11:21 AM GMT (Updated: 7 April 2022 11:21 AM GMT)

போலீஸ் கான்ஸ்டபிள் நேத்ரேஷ் சர்மா கையில் பச்சிளம் குழந்தையை ஏந்தியபடி ஆபத்தில் இருந்து காப்பாற்றிக்கொண்டு ஓடும் போட்டோ பாராட்டுக்களை பெற்றது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான்  மாநிலம் கரவ்லி மாவட்டத்தில், கடந்த சனிக்கிழமையன்று மாலை, இந்து நாட்காட்டியின் கீழ் புத்தாண்டின் முதல் நாளான  ‘நவ் சம்வத்சர்’ கொண்டாடும் விதமாக கரவ்லி நகரில், முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதி வழியாக மோட்டார் சைக்கிள் பேரணி நேற்று நடைபெற்றது. அப்போது பேரணியின் மீது கல் வீசப்பட்டது. 

இதைத் தொடர்ந்து அங்கு பெரும் மத கலவரம் வெடித்தது.  இதனை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டது.

அதில் சில இரு சக்கர வாகனங்கள் மற்றும் கடைகள் எரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தின் போது, இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் காயம் அடைந்தனர். கரவ்லிக்கு 600 போலீசார் கொண்ட கூடுதல் படை அனுப்பப்பட்டது. பெரும்பாலான கடைகளில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு படையினர் கட்டுப்படுத்தினர்.

இந்த நிலையில், ராஜஸ்தான் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கையில் பச்சிளம் குழந்தையை ஏந்தியபடி ஆபத்தில் இருந்து காப்பாற்றிக்கொண்டு தப்பித்து ஓடும் போட்டோ பாராட்டுக்களை பெற்றது.  

கலவரக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்ட எரியும் கட்டிடங்களைக் கடந்து குறுகிய சந்துகள் வழியாக அவர் ஓடினார். இந்தப் படத்தை ஷாம்லி எஸ்எஸ்பி சுகிர்தி மாதவ் மிஸ்ரா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்றியதற்காக ராஜஸ்தான் காவல்துறையின் கான்ஸ்டபிள் நேத்ரேஷ் சர்மாவை நினைத்து மிகவும் பெருமைப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேத்ரேஷ் சர்மா என்ற கான்ஸ்டபிள், தன்னைச் சுற்றி வீடுகள் எரிந்து கொண்டிருக்கையில், தீயில் மாட்டிக்கொண்ட ஒரு குழந்தையை தன் கைகளில் தூக்கியபடி ஓடி காப்பற்றினார்.

இந்த மத கலவரத்தில்  நான்கு போலீசார் உட்பட குறைந்தது 42 பேர் காயமடைந்தனர்.



இந்த நிலையில், இப்போது 31 வயதான போலீஸ் கான்ஸ்டபிள் நேத்ரேஷ் சர்மா பதவி உயர்வு பெற்றுள்ளார். அவரது வீர தீர செயலை பாராட்டும் விதமாக  தலைமை கான்ஸ்டபிள் ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. முதல் மந்திரி அசோக் கெலாட் உத்தரவின் பேரில், காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “முதல் மந்திரி  என்னை வாழ்த்தினார், என் செயலை பாராட்டினார். கான்ஸ்டபிளில் இருந்து ‘ஹெட் கான்ஸ்டபிளாக’ பதவி உயர்வு வழங்கப்பட்டதை பற்றியும் என்னிடம் கூறினார். 

எரியும் வீட்டில் சிக்கிய ஒரு பெண் குழந்தையையும், அவளுடைய தாயையும், மேலும் இரண்டு பெண்களையும் நான் காப்பாற்றினேன்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Next Story