பஞ்சாப் மக்களுக்கு அடித்தது யோகம்... ஜூலை 1 முதல் 300 யூனிட் இலவச மின்சாரம்
பஞ்சாப்பில் வருகிற ஜூலை 1ந்தேதி முதல் ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அரசு இன்று அறிவித்து உள்ளது.
சண்டிகர்,
பஞ்சாப்பில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. அக்கட்சி சார்பில் முதல்-மந்திரி வேட்பாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பகவந்த் மான் கடந்த மார்ச் 16ந்தேதி முறைப்படி முதல்-மந்திரியாக பதவியேற்று கொண்டார்.
கடந்த ஆண்டு ஜூனில் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவால், பஞ்சாப்புக்கு வந்தபோது, நாங்கள் ஆட்சி அமைத்தால் இலவச மின்சார வினியோக திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தனது முதல் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார்.
இந்த சூழலில், அக்கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இதனை முன்னிட்டு, பஞ்சாப்பில் உள்ள உயரதிகாரிகளிடம் இலவச மின்சார வினியோக திட்ட நிறைவேற்றம் பற்றி கெஜ்ரிவால் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில், பஞ்சாப் மாநில மின் ஒழுங்குமுறை ஆணையத்திடம் தொடர்பு கொண்டு பேசியது முதல், மின் கட்டண தொகையை ஏற்பது வரை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த திட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு விட கூடாது என்பது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக்காக பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் கடந்த செவ்வாய் கிழமை கெஜ்ரிவாலை டெல்லிக்கு நேரில் சென்று சந்தித்து பேசினார்.
இதன் முடிவில், வருகிற 16ந்தேதி (இன்று) இத்திட்டம் பற்றி பஞ்சாப் மக்களுக்கு மிக பெரிய நல்ல செய்தி கிடைக்கும் என கூறினார்.
பஞ்சாப்பில் கடந்த 2016ம் ஆண்டு முதல், காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளுக்கான இலவச மின்வினியோகம் இருந்து வருகிறது. இத்திட்டத்தின்படி, எஸ்.சி., பி.சி. பிரிவினர் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழுள்ளோர் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் பெற்று வருகின்றனர்.
ஆம் ஆத்மியின் இலவச மின் வினியோக திட்ட உறுதிமொழியின்படி, பொருளாதார வேற்றுமையின்றி, அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
இதனால், 200 யூனிட் வரை இலவச மின்சாரம் பெற்று வருவோர் அனைவரும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவார்கள். 300 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் மேற்குறிப்பிட்ட வகையினர், கூடுதல் யூனிட்டுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும்.
இதுவரை மின்சார பலன்கள் பெறாத மற்றவர்கள் அனைவரும் மாதத்திற்கு 300 யூனிட்டுகளை இனி பெற்று கொள்ள முடியும். ஆனால், மாதம் ஒன்றுக்கு 300 யூனிட்டுகளுக்கு கூடுதலாக மின்நுகர்வு ஏற்பட்டால், அவர்கள் மொத்த மின்உபயோகத்திற்கான கட்டணமும் செலுத்த வேண்டும்.
இதன்படி, பஞ்சாப்பில் வருகிற ஜூலை 1ந்தேதி முதல் ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அரசு இன்று அறிவித்து உள்ளது. இன்றுடன் பகவந்த் பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைகிறது. இந்த சூழலில், அரசின் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இதற்கு முன் கடந்த மாதம், வீடு தேடி ரேசன் பொருட்கள் வினியோகிக்கும் திட்டம் ஒன்றை பகவந்த் மான் அறிமுகப்படுத்தினார். ஆம் ஆத்மியின் தேர்தல் அறிவிப்பில் முக்கிய அம்சம் ஆக இந்த திட்டமும் இடம் பெற்றிருந்தது.
Related Tags :
Next Story