நாடாளுமன்ற இடைத்தேர்தலில் சத்ருகன் சின்கா வெற்றி


நாடாளுமன்ற இடைத்தேர்தலில் சத்ருகன் சின்கா வெற்றி
x

மேற்கு வங்காளத்தின் அசன்சோல் நாடாளுமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சத்ருகன் சின்கா வெற்றி பெற்றார்.

சத்ருகன் சின்கா போட்டி

மேற்கு வங்காளத்தின் அசன்சோல் தொகுதியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாபுல் சுப்ரியோ, பின்னர் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.

இதனால் காலியான அந்த தொகுதிக்கு கடந்த 12-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நடிகர் சத்ருகன் சின்கா (வயது 76) களமிறக்கப்பட்டார்.

பீகாைர சேர்ந்த சத்ருகன் சின்கா, பா.ஜனதா சார்பில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.யாக பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்.

2019-ம் ஆண்டு பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்ததோடு, அந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பீகாரின் பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இதில் தோல்வியை தழுவினார்.

பின்னர் திரிணாமுல் காங்கிரசில் தன்னை அவர் இணைத்துக்கொண்டார். அவருக்கு, அசன்சோல் தொகுதியில் போட்டியிட மம்தா பானர்ஜி வாய்ப்பளித்தார்.

சட்டசபை இடைத்ேதர்தல்

இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் சத்ருகன் சின்கா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதாவின் அக்னிமித்ரா பாலை விட 3 லட்சத்துக்கு அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தேர்தல் பிரசாரத்தின்போது சத்ருகன் சின்கா வெளிநபர் என்ற பிரசாரத்தை பா.ஜனதா முன்வைத்தது. ஆனால் அதையும் முறியடித்து சத்ருகன் சின்கா வெற்றி பெற்றுள்ளார்.

இதைப்போல மேற்கு வங்காள மந்திரியாக இருந்த சுப்ரதா முகர்ஜியின் மரணத்தால் காலியான பல்லிகங்கே சட்டசபை தொகுதிக்கும் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது.

இதில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு திரிணாமுல் காங்கிரசில் இணைந்திருந்த பாபுல் சுப்ரியோவுக்கு அந்த கட்சி வாய்ப்பளித்தது. இந்த ேதர்தலில் அவர் 50,722 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட இடதுசாரி முன்னணி வேட்பாளர் சைரா ஷா ஹலிமுக்கு 30,818 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

காங்கிரஸ் வெற்றி

இதற்கிடையே சத்தீஷ்காரின் கைராகர் சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் வேட்பாளர் யசோதா வர்மா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதாவின் கோமல் ஜாங்கேலை விட 20,176 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிவாகை சூடினார்.

இதைப்போல மராட்டிய மாநிலம் கோலாப்பூர் வடக்கு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜெயஸ்ரீ ஜாதவ், பா.ஜனதாவின சத்யஜித் கதமை விட 18 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

பீகாரின் போச்சகன் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதாதள வேட்பாளர் அமர் பஸ்வான், பா.ஜனதாவின் பேபி குமாரியை 35 ஆயிரத்துக்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.



Next Story