நாடு முழுவதும் களைகட்டிய ஈஸ்டர் பெருநாள் கொண்டாட்டம்! தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


நாடு முழுவதும் களைகட்டிய ஈஸ்டர் பெருநாள் கொண்டாட்டம்! தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
x
தினத்தந்தி 17 April 2022 6:08 PM IST (Updated: 17 April 2022 6:08 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் வழக்கம் போல ஈஸ்டர் கொண்டாட்டம் களைகட்டியது.நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

சென்னை,

ஈஸ்டர் பெருநாளையொட்டி நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் இன்று நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை கூட்டங்களில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.  ஏராளமான கிறிஸ்தவ மக்கள்  தேவாலயங்களில் நடைபெற்ற பிரார்த்தனைகளில் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். 

உலக இரட்சகர் இயேசு கிறிஸ்து, புனித வெள்ளி அன்று சிலுவையில் அறையப்பட்டு தூக்கிலிடப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று புனித பைபிளில் கூறப்பட்டுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக, ஈஸ்டர் பெருநாள் பண்டிகை உருவானது.



கேரளாவில் வழக்கம் போல ஈஸ்டர் கொண்டாட்டம்  களைகட்டியது. கொச்சியில், செயின்ட் மேரிஸ் கதீட்ரல் பேராலயத்தில் பிரார்த்தனை நடைபெற்றது.அதில் சீரோ மலபார் தேவாலயத்தின் மேஜர் பேராயர் கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி தலைமை தாங்கினார்.  

அப்போது அவர் பேசுகையில் “பகைமை இல்லாமல் அனைவரையும் சகோதர சகோதரிகளாகப் பார்க்கும் நேர்மறை மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

மும்பையில் உள்ள புகழ்பெற்ற செயின்ட் மைக்கேல் தேவாலயத்திலும் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அந்த  பிரார்த்தனையில் பங்கேற்ற ஒரு பெண்மணி கூறியதாவது, “இது எங்களுக்கு ஒரு முக்கியமான நாள், இன்று நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். 

இயேசு இன்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர் நமக்காக சிலுவையில் மரித்தார். அவர் உலகம் முழுவதற்கும் இரட்சிப்பைக் கொண்டு வந்து, நம் அனைவருக்கும் ஒரு புதிய வாழ்க்கையைக் கொடுத்தார்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.



கோவாவில், ஈஸ்டர் கொண்டாட்டங்கள் களைகட்டின. தலைநகர் பனாஜியில் உள்ள இமாகுலேட் கன்செப்சன் தேவாலயத்தில், பக்தர்களால் மிகுந்த உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் ஈஸ்டர் தின பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தேவாலயங்களில் இன்று ஈஸ்டர் தின கொண்டாட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.



Next Story