கொரோனா தகவல்களை தினந்தோறும் அளியுங்கள் - கேரள அரசுக்கு மத்திய அரசு கண்டிப்பு


கோப்புப் படம் PTI
x
கோப்புப் படம் PTI
தினத்தந்தி 19 April 2022 5:06 AM IST (Updated: 19 April 2022 5:06 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தகவல்களை தினந்தோறும் அளியுங்கள் என்று கேரள அரசுக்கு மத்திய அரசு கூறியுள்ளது.

புதுடெல்லி, 

கேரளாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், கொரோனாவுக்கு 213 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. 24 மணி நேரத்தில் ஒருவர் மட்டுமே பலியாகி உள்ளார். மற்றவர்கள், சில நாட்களுக்கு முன்பே இறந்தும், கணக்கில் சேர்க்கப்படாதவர்கள் ஆவர்.

விடுபட்ட அந்த மரணங்களையும், கேரள அரசு ஒரு நாள் மரண கணக்கில் சேர்த்துள்ளது. இந்த நிலையில், கேரள சுகாதார முதன்மை செயலாளர் ராஜன் என்.கோப்ரகாடேவுக்கு மத்திய சுகாதார அமைச்சக இணை செயலாளர் லாவ் அகர்வால் நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கேரள அரசு, தனது மாநில அளவிலான கொரோனா பாதிப்பு குறித்த புள்ளிவிவரங்களை 5 நாள் கழித்து தெரிவித்து இருக்கிறது. இது, கொரோனா மரணங்கள், பாதிப்புகள் உள்ளிட்ட நிலவரத்தை கண்காணிப்பதில் பாதிப்பு ஏற்படுத்தும்.

கொரோனா விவரங்களை நாள்தோறும் தெரிவிக்குமாறு மத்திய அரசு ஏற்கனவே கூறியுள்ளது. அப்போதுதான் கொரோனா நிலவரத்தை துல்லியமாக புரிந்துகொண்டு முக்கியமான முடிவு எடுக்க முடியும். கொரோனா என்பது அதிகமாக பரவக்கூடியது. 

புதிதாக உருமாற்றம் அடையக்கூடியது. எனவே, தினந்தோறும் தகவல்களை அளித்தால்தான், மாவட்ட, மாநில, தேசிய அளவிலான நிலவரத்தை ஆய்வு செய்து வியூகம் வகுக்கலாம். ஆகவே, கொரோனா குறித்த புள்ளிவிவரங்களை நாள்தோறும் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story