மடத்திற்கான மானிய ஒதுக்கீட்டில் 30% கமிஷன்; கர்நாடக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு
கர்நாடகாவில் மடத்திற்காக ஒதுக்கப்படும் மானிய தொகையில் கர்நாடக அரசு 30% கமிஷனை எடுத்து கொள்கிறது என்று சாமியார் பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக ஆளும் கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக கிளம்பி வருகின்றன. சமீபத்தில், பெலகாவி மாவட்டத்தில் இந்தலகா கிராமத்தில் வசித்து வந்த காண்டிராக்டர் சந்தோஷ் பாட்டீல் என்பவர், பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறினார்.
இதன்படி, பொதுப்பணி துறையில் ஒப்புதல் வழங்கிய பணிக்காக, பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராமப்புற வளர்ச்சி துறை மந்திரியான கே.எஸ். ஈசுவரப்பா, தன்னிடம் 40 சதவீத லஞ்ச பணம் கேட்டார் என கூறினார்.
அடுத்த சில நாட்களில் உடுப்பி நகரில் கர்நாடக அரசு போக்குவரத்து கழக பேருந்து நிலையம் அருகே சாம்பவி லாட்ஜில் அவர் மரணம் அடைந்து கிடந்தது தெரிய வந்தது.
ஆளும் பா.ஜ.க.வின் தொண்டர்களில் ஒருவரான சந்தோஷ் பாட்டீலின் திடீர் மரணம் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியது. அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு குறிப்பு ஒன்றையும் எழுதி வைத்து உள்ளார். அதில், தனது மரணத்திற்கு ஈசுவரப்பா தான் காரணம் என குறிப்பிட்டு உள்ளார்.
இதுபற்றி உடுப்பி போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஈசுவரப்பா பதவி விலக வேண்டும், காண்டிராக்டர் மரணத்தில் உள்ள மர்ம விசயங்களை விசாரித்து வெளிப்படுத்த வேண்டும் என போராட்டத்திலும் ஈடுபட்டன.
எனினும், சந்தோஷ் பாட்டீல் யார் என்றே எனக்கு தெரியாது என மந்திரி ஈசுவரப்பா கூறிய நிலையில், சொந்த முடிவின் பேரில் பதவி விலகுகிறேன் என்று கூறினார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கர்நாடகாவில் சாமியார்களுக்கான மடத்தின் நலத்திட்ட பணிகளுக்காக அரசு சார்பில் மானிய தொகை ஒதுக்கீடு செய்யப்படுவதுண்டு. இதில், பலேஹோசூர் மடத்தின் சாமியார் திங்கலேஷ்வர சுவாமிகள் கர்நாடக அரசு மீது அதிரடி குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.
வீரசைவ லிங்காயத் சமூகத்திற்கான மடத்தின் சாமியாரான அவர் கூறும்போது, மடத்திற்காக அல்லது கோவில்களுக்காக ஒதுக்கப்படும் மானிய தொகையில், அவற்றை நலத்திட்ட பணிகளுக்கு விடுவிப்பதற்கு முன் கர்நாடக அரசு 30% கமிஷனை எடுத்து கொள்கிறது என்று கூறி உள்ளார்.
இந்த கமிஷன் தொகையை பற்றி மடத்தின் நிர்வாகிகளிடம் அரசு அதிகாரிகள் வெளிப்படையாகவே தொடர்பு கொண்டு பேசுவதுடன் இல்லாமல், கமிஷன் தொகை வழங்கினால் மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்படும் என தெளிவாக கூறுகின்றனர்.
கர்நாடக அரசில் ஊழல் மலிந்து புதிய உச்சம் தொட்டிருப்பது வேதனை தருகிறது. இந்த திட்டம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே, அதில் கமிஷன் பெறுவது பற்றி எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்யும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டை நான் மட்டுமே கூறவில்லை. மக்களும் கூறுகிறார்கள். நான் கூறுவதில் உறுதியாக இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
எனினும், இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, திங்கலேஷ்வர சுவாமிஜி அவர்கள் மதிப்பிற்குரிய சாமியார். யார் கமிஷன் கேட்டார்கள், யாருக்கு கமிஷன் கொடுக்கப்பட்டது, அது தொடர்புடைய அனைத்து விவரங்களையும் அவர் கொடுத்தாரென்றால், பின்னர் அதுபற்றி முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று பொம்மை கூறியுள்ளார்.
இதனால், ஊழல் குற்றச்சாட்டுகளால் திக்குமுக்காடி போயுள்ள அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்க எதிர்க்கட்சிகளுக்கு மற்றொரு ஆயுதம் கிடைத்துள்ளது.
Related Tags :
Next Story