3 மாதங்களில் முதல் முறையாக கொரோனா பரவல் விகிதம் அதிகரிப்பு..!!


Image Courtesy: ANI
x
Image Courtesy: ANI
தினத்தந்தி 21 April 2022 12:25 AM IST (Updated: 21 April 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கடந்த 3 மாதங்களில் முதல் முறையாக கொரோனா பரவல் விகிதம் அதிகரித்துள்ளது.

புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளான ஒருவர், மற்றவர்களுக்கு தொற்றை பரப்புகிற விகிதம் ‘ஆர் வேல்யூ’ என்று அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக இந்த தொற்றை பரப்புகிற விகிதம் அதிகரித்து வந்துள்ளது.

தற்போது, அது 3 மாதங்களில் முதல்முறையாக 1-க்கு மேல் அதிகரித்துள்ளது. கடந்த 12-ந் தேதி முதல் 18-ந் தேதி வரையிலான வாரத்தில், இது 1.07 ஆக அதிகரித்துள்ளது. அதாவது தொற்று பாதித்த ஒருவர் 1.07 பேருக்கு தொற்றை பரப்புகிறார்.

கடந்த 5-ந் தேதி முதல் 11-ந் தேதி வரையிலான வாரத்தில் இது 0.93 சதவீதமாக இருந்தது. கடந்த முறை இந்த தொற்று பரப்பு விகிதம் 1-க்கு அதிகமாக இருந்தது, ஜனவரி 16-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரையிலான வாரத்தில் (1.28) தான்.

இந்த ஏற்றத்துக்கு காரணம், டெல்லியில் கொரோனா அதிகரித்தது மட்டுமல்ல, அரியானா, உத்தரபிரதேசத்திலும் அதிகரித்ததுதான் என்று நிபுணர்கள் கூறி உள்ளனர்.

இந்த தொற்று பரவல் விகிதம் அதிகரிப்பது, சிகிச்சை பெறுகிற நோயாளியின் எண்ணிக்கை அதிகரிப்பதை காட்டுகிறது. தொற்றைக்கட்டுப்படுத்த இது 1-ஐ விட குறைவாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

1-ஐ விட குறைவாக ஆகிறபோது, தொற்று வெடிப்பை தக்க வைக்க போதுமான மனிதர்கள் இல்லை என்பதால், நோய் பரவல் நின்று விடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Story