ஊழலற்ற ஆட்சிக்கு ஆம் ஆத்மி கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும் - பெங்களூருவில் கெஜ்ரிவால் பேச்சு


ஊழலற்ற ஆட்சிக்கு ஆம் ஆத்மி கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும் - பெங்களூருவில் கெஜ்ரிவால் பேச்சு
x
தினத்தந்தி 22 April 2022 6:12 AM IST (Updated: 22 April 2022 6:12 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா நாட்டில் மதக்கலவரங்களை தூண்டிவிடுகிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

பெங்களூரு,

ஆம் ஆத்மி கட்சியின் விவசாய அணி மாநாடு பெங்களூரு நேஷனல் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கர்நாடகத்தில் 40 சதவீத கமிஷன் அரசு நடந்து கொண்டிருக்கிறது. கர்நாடக மக்கள் மனது வைத்தால் 40 சதவீத அரசையும், முந்தைய 20 சதவீத காங்கிரஸ் அரசையும் தொலைவில் வைக்க முடியும். டெல்லியில் பூஜ்ஜிய சதவீத கமிஷன் அரசு நடந்து வருகிறது. ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை நடத்த ஆம் ஆத்மி கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும். பா.ஜனதா நாட்டில் மதக்கலவரங்களை தூண்டிவிடுகிறது. ஆனால் ஆம் ஆத்மியோ நல்லாட்சி நிர்வாகத்தை வழங்கி வருகிறது.

டெல்லியில் மக்கள் உலக தரத்தில் சுகாதாரம், கல்வி, விளையாட்டு வசதிகளை பெற்று வருகிறார்கள். குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. டெல்லியை போல் இங்கும் அனைத்து வசதிகளும் மக்களுக்கு செய்து கொடுக்கப்படும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ., வருமான வரி, அமலாக்கத்துறை அதிகாரிகள் எனது வீட்டில் சோதனை நடத்தினர்.

அவர்களுக்கு எனது வீட்டில் ஒரு துண்டு தான் கிடைத்தது. வேறு எதுவும் கிடைக்கவில்லை. இதன் மூலம் ஆம் ஆத்மி அரசு பூஜ்ஜிய கமிஷன் அரசு என்று மத்திய அரசுக்கு சி.பி.ஐ. பிரமாண பத்திரம் வழங்கியுள்ளது.

இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.

Next Story